நிகழ்ச்சி நிரல்

சென்னை தீவுத்திடலில் சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் சென்னை விழா சர்வதேச கைத்தறி, கைவினைப்பொருட்கள் மற்றும் உணவுத்திருவிழா 28.04.2023 தொடங்கி மே மாதம் 14 ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான தொடக்க விழாவில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை விழா – சர்வதேச கைத்தறி, கைவினைப்பொருட்கள் மற்றும் உணவுத்திருவிழா அரங்கங்களை திறந்து வைத்து பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள்¬¬¬¬¬, மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு அவர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி மாண்புமிகு மேயர் திருமதி. ஆர். பிரியா அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

தமிழ்நாட்டை முக்கியமான சுற்றுலா தலமாக உருவாக்கும் வகையில் முத்தமிழறிஞர் அவர்கள் சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தை 1971 ஆம் ஆண்டில் உருவாக்கி சுற்றுலா பேருந்து வசதியையும், சுற்றுலா திட்டங்களையும் அறிமுகப்படுத்தி நாட்டிற்கே முன்னோடியாக தமிழ்நாடு சுற்றுலாத்துறையை விளங்கச் செய்தார்கள். அவர்களால் தொடங்கப்பட்ட தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், "பூம்புகார்" என்ற வர்த்தக பெயரால் 01.08.1973 அன்று முதல் வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் முத்தமிழறிஞர் அவர்கள் 1989 ஆம் ஆண்டு முதன்முதலாக மகளிர் சுய உதவிக்குழுக்களை ஆரம்பித்து பெண்கள் தாங்களாகவே வங்கி நடவடிக்கைகள், சுய தொழில் செய்தல், குழுவாக செயல்படுதல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகுத்தார்கள்.

அவரது வழியில் தற்போது தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களும் சீரான வளர்ச்சி, சமமான வளர்ச்சி என்ற இலக்கை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அரசு நடைபெற்று வருகின்றது. அவர் ஆட்சிப் பொறுப்பேற்றபோது கொரோனா பாதிப்பால் நலிவடைந்த நிலையில் இருந்த சுற்றுலாத்துறை, முதலமைச்சர் அவர்களின் சிறப்பான முன்னெடுப்புகளால் தற்போது விரைவாக வளர்ச்சியடைந்து வருகின்றது.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு சுற்றுலா தலங்களில் அடிப்படை வசதி மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள சிறு வணிகர்களும், வாகன ஓட்டிகள், வாகன உரிமையாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் என லட்சக்கணக்கானோருக்கு இத்துறையின் மூலம் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் கிடைப்பதும், நிரந்தர பொருளாதாரம் மேம்பாட்டு வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டு வருகின்றது.

தமிழ்நாட்டை சேர்ந்த கைத்தறி நெசவாளர்கள், கைவினைக் கலைஞர்கள் பயன்பெறும் வகையில் நடைபெற உள்ள சென்னை விழாவில் 10 வெளிநாடுகளைச் சேர்ந்த கலைப்பொருட்கள் 30 அரங்கங்களில் இடம் பெறுகின்றன. 20 வெளிமாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள், நெசவாளர்களின் படைப்புகள் 83 அரங்கங்களில் இடம் பெற உள்ளன. தமிழ்நாட்டின் கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்த நெசவு துணிவகைகள், பட்டு சேலைகள், கோ – ஆப் டெக்ஸ் துணி வகைகள், பூம்புகார் கைவினைப் பொருட்கள் 70 அரங்கங்களில் இடம் பெற உள்ளன. மொத்தம் 311 அரங்கங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கண்காட்சியால் சென்னை பொதுமக்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் கைவினை கலைஞர்களின் படைப்புகளின் முக்கியத்துவம் குறித்து அறிந்து கொள்ள வாய்ப்பு உருவாகியுள்ளது.

தமிழ்நாடு கலை நயமும், பாரம்பரியமும் கொண்டதாகும். தொன்மை வாய்ந்த துறைமுக நகரங்களை கொண்ட தமிழ்நாட்டில் வெளிநாடுகளுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டதற்கான சான்றுகள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. ஆள்பாதி, ஆடைபாதி என்பது தமிழ்நாட்டின் பழமொழிகளுள் ஒன்றாகும். இந்த பழமொழி ஆடை நெய்யும் நெசவாளர்களின் புகழை தெரிவிப்பதாக உள்ளது.

கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்ற பழமொழி கைத்தொழிலின் மேன்மையை உணர்துவதாக உள்ளது. தற்போது நடைபெறும் திருமணங்களில் பெண்களின் ஆடைகள் வைவினைக் கலைஞர்கள் மூலம் நூல் வேலைப்பாடுகள் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுவது வைவினைக் கலைஞர்களுக்கு உள்ள முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.

சென்னை விழாவில் காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம், பட்டு சேலைகள், சேலம் வெண்பட்டு வேட்டிகள், தூய ஜரிகை சேலைகள், கோரா காட்டன் சேலைகள், மென்பட்டு சேலைகள், கோடம்பாக்கம் சேலைகள், பரமக்குடி காட்டன் சேலைகள், ராசிபுரம் தாழம்பூ பட்டு புடவைகள், ஆர்கானிக் கைத்தறி சேலைகள், நெகமம் கைத்தறி சேலைகள், பவானி ஜமக்காளம், படுக்கை விரிப்புகள், அலங்கார கைத்தறி துணிகள், மேஜை விரிப்புகள், தலையணை உறைகள், துண்டுகள், செட்டிநாடு சுங்கடி புடவைகள், ஓவியங்கள், மரவேலைப்பாடுகள், மகளிர் அணிகலன்கள், இயற்கை மூலிகை பொருட்கள், சிப்பிகளால் தயாரிக்கப்பட்ட கலை பொருட்கள், துணிப்பைகள், தஞ்சாவூர் ஓவியங்கள், மரச்சிற்பங்கள், பத்தமடை பாய் உள்பட ஏராளமான தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் தென்னக கலைபண்பாட்டு மையம் மற்றும் தமிழ்நாட்டின் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் மயிலாட்டம், ஒயிலாட்டம் என தினந்தோறும் 5 க்கும் மேற்பட்ட கலைநிகழ்ச்சிகள் பொதுமக்களின் கண்களுக்கு விருந்து படைக்க உள்ளன.

மேலும்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 30.03.2023 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட "ஊரக தொழில் முனைவுகளுக்குப் புதிய பாதை" மற்றும் "வறுமையிலிருந்து வளத்தை நோக்கி” புத்தகங்களை வெளியிட்டார். இந்நிகழ்வின்போது, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் திருமதி. பெ.அமுதா, இ.ஆ.ப., தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி. ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இணைச் செயலாளர் திரு. சந்திர சேகர் சாகமூரி, இ.ஆ.ப., ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா இன்று (08.03.2023) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் மாநில அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, குழு நடனம் மற்றும் குழுப் பாடல் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி விழாப் பேருரையாற்றினார்.

கிராமப் பகுதியில் வசிக்கும் ஏழை எளிய பெண்களை சுய உதவிக் குழுவாக ஒருங்கிணைத்து, அதன் மூலம் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் சுய சார்புத்தன்மை ஆகியவற்றில் பெண்களின் நிலையை மேம்பாடு அடையச் செய்யும் நோக்கத்துடன் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தி வருகிறது.

தற்போது தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வழிகாட்டுதலில் நலிவுற்றோரை ஒருங்கிணைத்து சிறப்புக் குழுக்கள், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்களைக் கொண்ட குழுக்கள் போன்றவை அமைக்கப்பட்டு, அவைகளுக்கு சுழல் நிதி, நலிவுற்றோர் மேம்பாட்டு நிதி மற்றும் சமுதாய மேம்பாட்டு நிதி ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றது. இதுவரை 8,23,825 சுய உதவிக் குழுவினருக்கு ரூ. 44,840 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

மேலும் மகளிர் மற்றும் குழந்தைகளின் ஊட்டச் சத்தினை உறுதி செய்திட மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களின் வீட்டின் பின்புறத்தில் ஊட்டச் சத்துத் தோட்டம் அமைத்து, இத்தோட்டத்தில், இயற்கை முறையில் பலன் தரும் சத்தான காய் கனிகள் மற்றும் சிறுதானியங்கள் கொண்ட பயிர் வகைகளை வளர்க்க ஏதுவாக ஊட்டச் சத்துத் தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புரங்களில் உள்ள ஏழை எளிய மக்களின் வாழ்வாதார வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் அமைக்கப்படும் சுய உதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் ஆகியவற்றின் மூலம் நகர்ப்புர ஏழை மக்கள் பொருளாதார முன்னேற்றம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேற்கண்டவைகள் மட்டுமின்றி இன்னும் எண்ணற்ற பல மக்கள் நலத் திட்டங்கள் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருவதால், ஒளிமயமான தமிழகம் வலிமையானதாக எழுச்சி பெற்று வருகிறது.

பல்வேறு தடைகளைக் கடந்து, சாதனைகளைப் படைத்து வரும் பெண்களை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் மகளிர் தினத்தில் அவர்களின் பெருமைகளுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் இன்று (08.03.2023) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் விழா அரங்கத்தில் அமைக்கப்பட்டிருந்த சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களின் அரங்கினைப் பார்வையிட்டு, அங்கு இருந்த சுய உதவிக் குழு மகளிருடன் கலந்துரையாடினார்கள்.

மேலும்

கோயம்புத்தூர் மாநகராட்சி, வ.உ.சி மைதானத்தில் இன்று (05.03.2023) தேசிய அளவிலான மகளிர் சுய உதவிக்குழுக்கள் பொருட்களின் சாரஸ் கண்காட்சியினை மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்கள்.

மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்கள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும் வகையிலும், அவர்களின் தயாரிப்புப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், மாநில / மாவட்ட வட்டார அளவில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிப்புப் பொருட்களின் விற்பனைக் கண்காட்சிகளை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தொடர்ந்து நடத்தி வருகிறது.

ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறையானது கிராமப்புற கைவினைக் கலைஞர்கள் தங்களின் தயாரிப்புப் பொருட்களை காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் ஏதுவாக பல்வேறு மாநில அரசுகளுடன் இணைந்து நடத்தி வரும் தேசிய அளவிலான சாரஸ் கண்காட்சி கோயம்புத்தூர் மாவட்டம், அவினாசி சாலை, வ.உ.சி மைதானத்தில் இன்று 05.03.2023 முதல் 12.03.2023 வரை தினமும் காலை 10.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறவுள்ளது. மேலும், இக்கண்காட்சியில் தினந்தோறும் மாலையில் பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.

இக்கண்காட்சியில் 80அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஆந்திரா , கர்நாடகா, கேரளா, தெலுங்கனா, கோவா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 27 மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்களின் விற்பனை பொருட்களை சந்தைப்படுத்தி உள்ளனர். தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் இருந்தும் மகளிர் சுய உதவிக்குழுக்களும் விற்பனை நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ள கைவினைப்பொருட்கள், கைத்தறி புடவைகள், சணல், வாழைநார் மற்றும் துணிப்பைகள், மசாலா பொருட்கள், இயற்கை உணவு பொருட்கள், பனைவெல்லம், திண்பண்டங்கள், எண்ணெய் வகைகள், கால்மிதியடிகள், ஐம்பொன் மற்றும் அலங்கார நகைகள், மூலிகை பொருட்கள், பூஜை பொருட்கள், இயற்கை வலி நிவாரணிகள், மென்பொம்மைகள், மற்றும் கிருமிநாசினிகள் போன்ற பல்வேறு மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் பார்வைக்காகவும், விற்பனைக்காகவும் வைக்கப்பட்டுள்ளன.

இக்கண்காட்சியில் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 13 மகளிர் சுய உதவிக்குழுக்கள் கலந்து கொண்டு, தங்கள் பொருட்களை விற்பனைக்கு காட்சிபடுத்தி உள்ளனர். மேலும், ஆவின், காதி, டான் டீ போன்ற துறைகள் தங்கள் விற்பனை அரங்குகளை அமைத்துள்ளனர்.

இந்த ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டு, சிறு தானிய உணவுகளை மக்கள் அதிக அளவில் பயன்படுத்திட ஏதுவாக இக்கண்காட்சியில் விற்பனை செய்யப்படுகின்றன. பொதுமக்கள், அனைவரும் இக்கண்காட்சியினை பார்வையிட்டு, மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் வாங்கி அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும்

மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 08.02.2023 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் பூமாலை வணிக வளாகத்தில், நரிக்குறவர் சுய உதவிக் குழுப் பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விற்பனை மையத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இந்நிகழ்வின்போது, மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர்கள், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ம.ஆர்த்தி, இ.ஆ.ப., மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்

மேலும்

மாண்புமிகு இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 06.02.2023 அன்று மதுரை மாவட்டம், பாண்டி கோவில் சுற்றுச்சாலை அருகே உள்ள கலைஞர் திடலில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பாக மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த 72.092 பயனாளிகளுக்கு ரூ.173 கோடி மதிப்பீட்டில் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கி, சியாமா பிரசாத் முகர்ஜி ரூர்பன் திட்டத்தின் கீழ் ரூ.8.65 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 30 திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி, மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மாநகராட்சி மேயர், நாடளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும்

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விற்பனைக் கண்காட்சியினை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (30.12.2022) சென்னை, நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வைத் தொடர்ந்து மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுப் பெட்டகங்களை இணையதளம் மூலம் விற்பனை செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்த மாண்புமிகு அமைச்சர் அவர்கள், கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள விற்பனை அரங்குகளைப் பார்வையிட்டு, அங்கிருந்த சுய உதவிக் குழுவினரிடம் உரையாடி, அவர்களின் தயாரிப்புப் பொருட்களை வாங்கி மகிழ்ந்தார்

இக்கண்காட்சியில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களான முந்திரிப் பருப்பு வகைகள், மசாலாப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், நாட்டுச் சர்க்கரை, சத்து மாவு, சுடுமண் சிற்பங்கள், கால் மிதியடிகள், பட்டு மற்றும் பருத்திப் புடவைகள், கண்ணாடி ஓவியங்கள், கைவினைப் பொருட்கள், பனை ஓலைப் பொருட்கள், பொம்மைகள், காபிப் பொடி, மிளகு, இயற்கை மூலிகைகள், செயற்கை ஆபரணங்கள், சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகள், பரிசுப் பொருட்கள், ஆயத்த ஆடைகள், மரச் சிற்பங்கள், இயற்கை உரங்கள், தேன், கடலை மிட்டாய், மூலிகை பொடிகள் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஆகியவற்றின் வழிகாட்டுதலில் செயல்படும் சுய உதவிக் குழுக்கள், திருநங்கையர் சுய உதவிக் குழுக்களும் தங்களின் தயாரிப்புப் பொருட்களை விற்பனை செய்ய உள்ளனர். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத துணிப் பைகள், மஞ்சப் பைகள் விற்பனை செய்யும் அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய சுவை மிகுந்த உணவுகளை உண்டு களித்திட உணவு அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (29.12.2022) திருச்சிராப்பள்ளி, அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 42,081 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 2,548.04 கோடி ரூபாய் வங்கி கடன் இணைப்பு மற்றும் இதர பயன்கள் வழங்கப்படவுள்ள நிகழ்வில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு மட்டும் 2764 மகளிர் சுயஉதவிக் குழுக்களின் 54,654 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 78 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு மற்றும் இதர பயன்களை வழங்கினார். மேலும், 33 சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருதுகளையும், 8 வங்கிகளுக்கு வங்கியாளர் விருதுகளையும் வழங்கி சிறப்பித்தார்.

கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் தன்னம்பிக்கை மூலம் மகளிரின் நிலையை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தொடங்கப்பட்டது. பல்வேறு வறுமை ஒழிப்புத் திட்டங்களின் மூலம் தமிழ்நாட்டில் சுய உதவிக் குழுக்களுக்கு திறன் வளர்ப்புப் பயிற்சிகள் வழங்கி, வலுவான சமுதாயம் சார்ந்த அமைப்புகளான ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றை உருவாக்கி, வங்கிக் கடன் இணைப்புகளையும், தொழில் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தி, பெண்களின் ஆற்றலை அதிகரித்து, சுய உதவிக் குழு இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் உன்னதப் பணியை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் செய்து வருகிறது.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் மற்றும் தீன்தயாள் உபாத்தியாய கிராமப்புறத் திறன் மேம்பாட்டுத் திட்டம் ஆகிய முக்கிய திட்டங்களைச் செயல்படுத்தி எண்ணற்ற ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

சுய உதவிக் குழுக்கள் அடித்தட்டு மக்களின் நிறுவனமாக உருவாக்கப்பட்டு நிதி கட்டுப்பாடுகளை வரையறுத்து, ஜனநாயக முறையில் முடிவுகளை எடுக்க உதவுகிறது. மேலும், சுய உதவிக் குழுக்களிடையே முறையான கூட்டம் நடத்துதல், சேமித்தல், உள்கடன் வழங்குதல், கடன் திரும்ப செலுத்துதல் மற்றும் கணக்கு பதிவேடுகளை பராமரித்தல் ஆகிய ஐந்து கொள்கைகள் முறையாக கடைபிடிக்கின்றன.

தமிழ்நாட்டில் மொத்தம் 4.38 லட்சம் சுய உதவிக் குழுக்கள் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்களில் 50.24 இலட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். சுய உதவிக் குழுக்களுக்கு 2021-22ம் ஆண்டு 20,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதைவிட அதிகமாக 4,08,740 சுய உதவிக் குழுக்களுக்கு 21,392.52 கோடி ரூபாய் கடனுதவியாக வழங்கி சாதனை புரிந்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் சுய உதவிக் குழுக்களுக்கு 25,000 கோடி ரூபாய் கடன் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 16.12.2022 வரை 2,60,589 குழுக்களுக்கு ரூ. 14,120.44 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இலக்கை நிறைவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.<நடப்பு நிதியாண்டில் சுய உதவிக் குழுக்களுக்கு 25,000 கோடி ரூபாய் கடன் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 16.12.2022 வரை 2,60,589 குழுக்களுக்கு ரூ. 14,120.44 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இலக்கை நிறைவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும்

Page 5 of 6, showing 9 record(s) out of 54 total