தீன் தயாள் உபாத்தியாய கிராமின் கௌசல்ய யோஜனா

DDU-GKY

தீன் தயாள் உபாத்தியாய கிராமின் கௌசல்ய யோஜனா

தீன் தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டம் (DDU - GKY) என்பது ஒன்றிய மற்றும் மாநில அரசுகளிடையே 60:40 என்ற நிதி பகிர்வு முறையை கொண்டு ஊரகப் பகுதிகளில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களில் உள்ள இளைஞர்களுக்கான திறன் பயிற்சி அளிக்கும் திட்டமாகும். .

இத்திட்டத்தின் கீழ் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு பல்வேறு துறைகளின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட திட்ட செயலாக்க முகமைகள் மூலம் பல்வேறு திறன் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு குறைந்தபட்சம் 70% பணியமர்வு அளிக்கப்படுவது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும்.

இத்திட்டம் சமூகத்தில் பின் தங்கிய பிரிவினர்களான தாழ்த்தப்பட்ட வகுப்பினர் - 62%, பழங்குடியினர் - 3%, சிறுபான்மையினர் - 16%, மாற்றுத் திறனாளிகள் - 3% மற்றும் மகளிர் - 33% (அனைத்து பிரிவுகளும் சேர்த்து) பயன்பெறும் விதமாக கட்டாய சமூக உள்ளாக்கத்தை கொண்டுள்ளது. பயிற்சிக்குரிய பாடத்திட்டமானது தேசிய திறன் தகுதி கட்டமைப்புடன் (National Skill Qualification Framework – NSQF) இயைந்த ஒன்றாகும். மேலும், தொழில் பாடத்துடன் மென்திறன்களான ஆங்கில அறிவு, அடிப்படை கணிணி அறிவு ஆகிய பாடத்திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், இத்திட்டத்தின் கீழ் பயிற்சி முடிக்கும் இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. 2022-23 ஆம் ஆண்டில், 20,309 இளைஞர்கள் பயிற்சியில் கலந்து கொண்டு, அதில் 14,303 இளைஞர்கள் பயிற்சி முடித்து, 6,997 இளைஞர்கள் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

திறன் மற்றும் வாழ்வாதார அழைப்பு மையம்:

தீன் தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி (DDU-GKY) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் திறன் பயிற்சிகள், திறன் பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் ஆகியன குறித்த இளைஞர்களின் ஐயங்களை தீர்ப்பதற்காக அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வழைப்பு மையம் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் சுய உதவிக்குழுக்களுக்காக செயல்படுத்தப்படும் வாழ்வாதார திட்டங்கள் குறித்த சந்தேகங்களையும் கையாளும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாழ்வாதார உதவி அழைப்பு மையம் 155330 என்ற குறு எண்ணுடன் செயல்பட்டு வருகிறது.

பிரிட்டிஷ் கவுன்சிலுடன் இணைந்து ஆங்கிலம் மற்றும் மென் திறன் பயிற்சி

ஆங்கிலம் மற்றும் மென் திறன் பயிற்சிகள் அனைத்து திட்ட செயலாக்க முகமைகளிலும் ஒரே சீராக பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ”ஆங்கிலம் மற்றும் மென் திறன்களுக்கான பாடத்திட்டங்களை தரப்படுத்துதல்” எனும் திட்டத்தை துவங்கியுள்ளது. இதற்காக பிரிட்டிஷ் கவுன்சில் தொழில்நுட்ப சேவை நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டு புதிய பாடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறன் மேம்படுத்தப்பட்டு, அவர்களுக்கான வேலை கிடைக்கக் கூடிய சாத்திய கூறுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.