mahalir-thittam

இந்தியாவிலே முதல் முறையாக டாக்டர். கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் தலைமையில், தமிழக அரசு 1989 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் தர்மபுரி மாவட்டத்தில் வேளாண் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டிருந்த மகளிரைக் கொண்டு .பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதி (IFAD) நிதியுதவியுடன் மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் சுய உதவிக் குழுக்களை அமைக்க தொடங்கியது. பின்பு இத்திட்டம் சேலம், இராமநாதபுரம், விழுப்புரம் மற்றும் மதுரை மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டத்தின் சிறப்பான செயல்பாடுகளின் காரணமாக தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் மகளிர் திட்டம் என்ற பெயரில் மகளிரின் முன்னேற்றத்திற்காக இத்திட்டத்தை படிப்படியாக செயல்படுத்தியது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சுய உதவிக் குழுக்களுக்கு நிதி மற்றும் சமுக ஆற்றலளிப்பூட்டு மூலம் அவர்களின் சிறப்பான செயல்பாட்டில் மாநிலத்தில் மகளிர் திட்டம் ஒரு மாபெரும் இயக்கமாக உறுப்பெற்றுள்ளது.

தமிழக அரசின் தொலைநோக்கு பார்வையால் 1989 ஆம் ஆண்டு இந்திய ஒன்றியத்தில் முதல் முறையாக தொடங்கப்பட்ட இத்திட்டம், பிற மாநிலங்களால் பின்பற்றப்பட்டு வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு முன்னோடியாக விளங்குகிறது.

சமூக, பொருளாதார மேம்பாட்டை அடைவதற்கு மகளிரைக் கொண்டு சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளை உருவாக்கி, அவர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கி, வருமானம் ஈட்டும் தொழில் தொடங்கத் தேவையான வங்கிக்கடன் இணைப்புகள் ஏற்படுத்தி சுய உதவிக் குழு இயக்கத்தை வலுப்படுத்த இத்திட்டத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மகளிரை உறுப்பினர்களாகக் கொண்டு உருவாக்கப்படும் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு, முறையான பயிற்சி மற்றும் கூட்டமைப்புகள் மூலம் வங்கிகளுடன் நிதி இணைப்பு ஏற்படுத்தி வருமானம் ஈட்டும் தொழில்களில் ஈடுபட்டு சமூக, பொருளாதார முன்னேற்றம் அடைந்துள்ளனர். சமீபகாலமாக நலிவுற்றோரை ஒருங்கிணைத்து சிறப்புக் குழு ஏற்படுத்தவும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களைக் கொண்டும் குழுக்கள் அமைக்கப்படுகிறது.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து வறுமை ஒழிப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் பிற வறுமை ஒழிப்புத் திட்டங்கள் யாவும் மகளிர் திட்டத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவங்களேயாகும்.