நிகழ்ச்சி நிரல்

மகளிர் முன்னேற்றத்திற்காக செயல்பட்டு வரும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் துணை அமைப்பான தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (TNSRLM) வழிகாட்டுதலில் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அக்குழுக்களின் பொருளாதார சுயசார்பிற்கு வலு சேர்க்கும் வகையில் வங்கிக் கடன் இணைப்புகள் உள்ளிட்ட ஏராளமான கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் 2023-2024ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 30,000 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை செயல்படுத்தி, சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் இலக்கை எய்திடவும், சுய உதவிக் குழுக்களுக்கு விரைவாக வங்கிக் கடன் இணைப்புகள் பெற்றுத் தந்திடவும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, 20.06.2023 அன்று சென்னை, நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாக கூட்ட அரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி ஆகியவற்றிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி. ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்களும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொது மேலாளர் திரு. எம். மோகன் அவர்களும், கனரா வங்கியின் முதன்மைப் பொது மேலாளர் திரு. நாயர் அஜித் கிருஷ்ணன் அவர்களும் கையெழுத்திட்டனர். இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் திருமதி. பா. பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., அவர்கள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் துணைப்பொது மேலாளர் திருமதி. துர்க்கா தேவி அவர்கள், உதவிப் பொது மேலாளர் திரு. தீபக் குமார் திரிபாதி அவர்கள், மேலாளர் சுமதி அவர்கள், கனரா வங்கியின் பிராந்திய மேலாளர் திரு. ஜி. விஜயராகவன் அவர்கள், மேலாளர் திரு. ஆர். உதயக்குமார் அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும்

மகளிர் முன்னேற்றத்திற்காக செயல்பட்டு வரும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் துணை அமைப்பான தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (TNSRLM) வழிகாட்டுதலில் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அக்குழுக்களின் பொருளாதார சுயசார்பிற்கு வலுசேர்க்கும் வகையில் வங்கிக் கடன் இணைப்புகள் உள்ளிட்ட ஏராளமான கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் 2023-2024ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 30,000 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை செயல்படுத்தி, சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் இலக்கை எய்திடவும், சுய உதவிக் குழுக்களுக்கு விரைவாக வங்கிக் கடன் இணைப்புகள் பெற்றுத் தந்திடவும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, 10.05.2023 அன்று சென்னை, நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாக கூட்ட அரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) மற்றும் பாரத ஸ்டேட் வங்கி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி. ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்களும், சென்னை வட்ட பாரத ஸ்டேட் வங்கியின் பொது மேலாளர் திரு. நிராஜ் பாண்டா அவர்களும் கையெழுத்திட்டனர்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் திருமதி. பா. பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., அவர்கள், பாரத வங்கியின் துணைப் பொதுமேலாளர் திரு. ஜெகதீஸ்வர் கர்ரி அரசு மற்றும் பாரத ஸ்டேட்வங்கியின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், சுய உதவிக் குழுக்களின் வங்கி இணைப்பை அதிகரிப்பது மற்று கடன் வழங்குவதில் மாநிலம் முழுவதும் அதிக எண்ணிக்கையிலான கிளைகளை செயல்படுத்துவது, கிராமப்புற ஏழைகளின் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் சுழற்சியை மேம்படுத்துவது, கடன் திருப்பத்திற்கான எளிய வழிமுறைகளை செயல்படுத்துவது போன்ற பயன்கள் கிடைக்கும். மேற்கூறியவற்றைத் தவிர, முத்ரா, ஸ்டாண்ட் அப் இந்தியா மற்றும் பிற அரசு வழங்கும் திட்டங்களின் கீழ் சுய உதவிக் குழுக்களின் தகுதியுள்ள பெண் தொழில்முனைவோருக்கு SBI வங்கிக் கிளைகள் கடன் வசதிகளை வழங்கும்.

மேலும்

இந்தியாவில் செயல்படும் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான HCLTech-ன் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு அமைப்பான HCL அறக்கட்டளை, அதன் முதன்மைத் திட்டங்களில் ஒன்றான HCL Samuday-ஐ தமிழ்நாட்டின் 95 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்த மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் திருமதி. பெ.அமுதா, இ.ஆ.ப., மற்றும் HCL அறக்கட்டளையின் திட்ட இயக்குநர் திரு. அலோக் வர்மா ஆகியோர் இன்று (03.05.2023) சென்னை, தலைமைச் செயலகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்வில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் மரு. தாரேஸ் அகமது, இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சிறப்புச் செயலாளர் முனைவர் மு.கருணாகரன், இ.ஆ.ப., தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி. ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் திருமதி. பா.பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., கூடுதல் இயக்குநர் திருமதி. க. முத்து மீனாள், HCL நிர்வாகக் குழு உறுப்பினர் திரு. ஷிகர் மல்ஹோத்ரா, HCL அறக்கட்டளையின் துணைத் தலைவர் டாக்டர். நிதி புந்திர், குழு மேலாளர் திரு. பிரிஜோ தாருக், திரு. எம்.விஸ்வலிங்கம், திரு. வைபவ் சவுகான் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

HCL Samuday தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதூர் மற்றும் விளாத்திக்குளம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 95 கிராம ஊராட்சிகளில் 1,40,000 பயனாளிகளுக்கு பயனளிக்கும் வகையில் நீர்வள மேலாண்மை, விவசாயம், சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்து மேலாண்மை போன்ற துறைகளில் கவனம் செலுத்தி, பின்தங்கிய குடும்பங்களுக்கு சிறந்த வருமானத்திற்கு வழிவகுக்கும்.

HCL Samuday திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் 42,000 வீடுகளில் அடிப்படைக் கணக்கெடுப்பு முடிக்கப்பட்டு, ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் தேவையான திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு, அவை கிராம வளர்ச்சித் திட்டங்களாகத் தொகுக்கப்பட்டதின் வாயிலாக, கிராம சமூகங்களின் பங்கேற்பை அதிகரிக்க, தொடக்கத் திட்டங்கள் கண்டறியப்பட்டன.

    • 132 தொடக்கப் பள்ளிகளில் சிறந்த கற்றலுக்காக டிஜிட்டல் ஸ்மார்ட் போர்டுகள் பொருத்தப்பட்டுள்ளன.
    • டிஜிட்டல் கற்றலுக்காக 20 அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
    • 58 கிராம ஊராட்சிகளில் தொற்றாத நோய்களுக்கான மேம்பட்ட பரிசோதனை மற்றும் மேலாண்மை செய்யப்பட்டுள்ளன.
    • ஐந்து கிராம அளவிலான தையல் மையங்களில் தையல் இயந்திரங்கள் மூலம் சுய உதவிக் குழுக்களில் உள்ள 100 பெண்களுக்குப் பயிற்சி வழங்கி, அவர்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
    • ஊட்டச்சத்துக் குறைபாடு மேலாண்மைக்கான சோதனை முகாமில் கண்டறியப்பட்ட ஊட்டச்சத்து குறைபாடுள்ள 41 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மருந்துகள் வழங்கப்பட்டன.

தற்போது, HCL Samuday உத்தரப்பிரதேசத்தில் உள்ள Hardoi மாவட்டத்தின் பதினொரு பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. மேலும் 524 கிராம ஊராட்சிகளில் 2,136 கிராமங்களில் வசிக்கும் 24 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்துவதில் பெரும்பங்காற்றி வருகிறது. HCL Samuday மிகவும் அத்தியாவசியமான சொத்துக்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை உருவாக்கிட அரசுடன் இணைந்து, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் உள்ளூர் சமுதாய அமைப்புகளுடன் ஆழ்ந்து ஈடுபடுவதன் மூலம் சிறப்பான அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. மேலும், வளர்ச்சித் திட்டங்களில் உள்ளூர் சமூகங்களை பொறுப்பேற்க தூண்டுகோலாகவும் அமைந்து வருகிறது.

மேலும்

சென்னை தீவுத்திடலில் சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் சென்னை விழா சர்வதேச கைத்தறி, கைவினைப்பொருட்கள் மற்றும் உணவுத்திருவிழா 28.04.2023 தொடங்கி மே மாதம் 14 ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான தொடக்க விழாவில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை விழா – சர்வதேச கைத்தறி, கைவினைப்பொருட்கள் மற்றும் உணவுத்திருவிழா அரங்கங்களை திறந்து வைத்து பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள்¬¬¬¬¬, மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு அவர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி மாண்புமிகு மேயர் திருமதி. ஆர். பிரியா அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

தமிழ்நாட்டை முக்கியமான சுற்றுலா தலமாக உருவாக்கும் வகையில் முத்தமிழறிஞர் அவர்கள் சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தை 1971 ஆம் ஆண்டில் உருவாக்கி சுற்றுலா பேருந்து வசதியையும், சுற்றுலா திட்டங்களையும் அறிமுகப்படுத்தி நாட்டிற்கே முன்னோடியாக தமிழ்நாடு சுற்றுலாத்துறையை விளங்கச் செய்தார்கள். அவர்களால் தொடங்கப்பட்ட தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், "பூம்புகார்" என்ற வர்த்தக பெயரால் 01.08.1973 அன்று முதல் வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் முத்தமிழறிஞர் அவர்கள் 1989 ஆம் ஆண்டு முதன்முதலாக மகளிர் சுய உதவிக்குழுக்களை ஆரம்பித்து பெண்கள் தாங்களாகவே வங்கி நடவடிக்கைகள், சுய தொழில் செய்தல், குழுவாக செயல்படுதல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகுத்தார்கள்.

அவரது வழியில் தற்போது தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களும் சீரான வளர்ச்சி, சமமான வளர்ச்சி என்ற இலக்கை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அரசு நடைபெற்று வருகின்றது. அவர் ஆட்சிப் பொறுப்பேற்றபோது கொரோனா பாதிப்பால் நலிவடைந்த நிலையில் இருந்த சுற்றுலாத்துறை, முதலமைச்சர் அவர்களின் சிறப்பான முன்னெடுப்புகளால் தற்போது விரைவாக வளர்ச்சியடைந்து வருகின்றது.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு சுற்றுலா தலங்களில் அடிப்படை வசதி மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள சிறு வணிகர்களும், வாகன ஓட்டிகள், வாகன உரிமையாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் என லட்சக்கணக்கானோருக்கு இத்துறையின் மூலம் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் கிடைப்பதும், நிரந்தர பொருளாதாரம் மேம்பாட்டு வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டு வருகின்றது.

தமிழ்நாட்டை சேர்ந்த கைத்தறி நெசவாளர்கள், கைவினைக் கலைஞர்கள் பயன்பெறும் வகையில் நடைபெற உள்ள சென்னை விழாவில் 10 வெளிநாடுகளைச் சேர்ந்த கலைப்பொருட்கள் 30 அரங்கங்களில் இடம் பெறுகின்றன. 20 வெளிமாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள், நெசவாளர்களின் படைப்புகள் 83 அரங்கங்களில் இடம் பெற உள்ளன. தமிழ்நாட்டின் கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்த நெசவு துணிவகைகள், பட்டு சேலைகள், கோ – ஆப் டெக்ஸ் துணி வகைகள், பூம்புகார் கைவினைப் பொருட்கள் 70 அரங்கங்களில் இடம் பெற உள்ளன. மொத்தம் 311 அரங்கங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கண்காட்சியால் சென்னை பொதுமக்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் கைவினை கலைஞர்களின் படைப்புகளின் முக்கியத்துவம் குறித்து அறிந்து கொள்ள வாய்ப்பு உருவாகியுள்ளது.

தமிழ்நாடு கலை நயமும், பாரம்பரியமும் கொண்டதாகும். தொன்மை வாய்ந்த துறைமுக நகரங்களை கொண்ட தமிழ்நாட்டில் வெளிநாடுகளுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டதற்கான சான்றுகள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. ஆள்பாதி, ஆடைபாதி என்பது தமிழ்நாட்டின் பழமொழிகளுள் ஒன்றாகும். இந்த பழமொழி ஆடை நெய்யும் நெசவாளர்களின் புகழை தெரிவிப்பதாக உள்ளது.

கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்ற பழமொழி கைத்தொழிலின் மேன்மையை உணர்துவதாக உள்ளது. தற்போது நடைபெறும் திருமணங்களில் பெண்களின் ஆடைகள் வைவினைக் கலைஞர்கள் மூலம் நூல் வேலைப்பாடுகள் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுவது வைவினைக் கலைஞர்களுக்கு உள்ள முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.

சென்னை விழாவில் காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம், பட்டு சேலைகள், சேலம் வெண்பட்டு வேட்டிகள், தூய ஜரிகை சேலைகள், கோரா காட்டன் சேலைகள், மென்பட்டு சேலைகள், கோடம்பாக்கம் சேலைகள், பரமக்குடி காட்டன் சேலைகள், ராசிபுரம் தாழம்பூ பட்டு புடவைகள், ஆர்கானிக் கைத்தறி சேலைகள், நெகமம் கைத்தறி சேலைகள், பவானி ஜமக்காளம், படுக்கை விரிப்புகள், அலங்கார கைத்தறி துணிகள், மேஜை விரிப்புகள், தலையணை உறைகள், துண்டுகள், செட்டிநாடு சுங்கடி புடவைகள், ஓவியங்கள், மரவேலைப்பாடுகள், மகளிர் அணிகலன்கள், இயற்கை மூலிகை பொருட்கள், சிப்பிகளால் தயாரிக்கப்பட்ட கலை பொருட்கள், துணிப்பைகள், தஞ்சாவூர் ஓவியங்கள், மரச்சிற்பங்கள், பத்தமடை பாய் உள்பட ஏராளமான தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் தென்னக கலைபண்பாட்டு மையம் மற்றும் தமிழ்நாட்டின் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் மயிலாட்டம், ஒயிலாட்டம் என தினந்தோறும் 5 க்கும் மேற்பட்ட கலைநிகழ்ச்சிகள் பொதுமக்களின் கண்களுக்கு விருந்து படைக்க உள்ளன.

மேலும்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 30.03.2023 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட "ஊரக தொழில் முனைவுகளுக்குப் புதிய பாதை" மற்றும் "வறுமையிலிருந்து வளத்தை நோக்கி” புத்தகங்களை வெளியிட்டார். இந்நிகழ்வின்போது, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் திருமதி. பெ.அமுதா, இ.ஆ.ப., தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி. ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இணைச் செயலாளர் திரு. சந்திர சேகர் சாகமூரி, இ.ஆ.ப., ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா இன்று (08.03.2023) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் மாநில அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, குழு நடனம் மற்றும் குழுப் பாடல் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி விழாப் பேருரையாற்றினார்.

கிராமப் பகுதியில் வசிக்கும் ஏழை எளிய பெண்களை சுய உதவிக் குழுவாக ஒருங்கிணைத்து, அதன் மூலம் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் சுய சார்புத்தன்மை ஆகியவற்றில் பெண்களின் நிலையை மேம்பாடு அடையச் செய்யும் நோக்கத்துடன் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தி வருகிறது.

தற்போது தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வழிகாட்டுதலில் நலிவுற்றோரை ஒருங்கிணைத்து சிறப்புக் குழுக்கள், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்களைக் கொண்ட குழுக்கள் போன்றவை அமைக்கப்பட்டு, அவைகளுக்கு சுழல் நிதி, நலிவுற்றோர் மேம்பாட்டு நிதி மற்றும் சமுதாய மேம்பாட்டு நிதி ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றது. இதுவரை 8,23,825 சுய உதவிக் குழுவினருக்கு ரூ. 44,840 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

மேலும் மகளிர் மற்றும் குழந்தைகளின் ஊட்டச் சத்தினை உறுதி செய்திட மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களின் வீட்டின் பின்புறத்தில் ஊட்டச் சத்துத் தோட்டம் அமைத்து, இத்தோட்டத்தில், இயற்கை முறையில் பலன் தரும் சத்தான காய் கனிகள் மற்றும் சிறுதானியங்கள் கொண்ட பயிர் வகைகளை வளர்க்க ஏதுவாக ஊட்டச் சத்துத் தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புரங்களில் உள்ள ஏழை எளிய மக்களின் வாழ்வாதார வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் அமைக்கப்படும் சுய உதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் ஆகியவற்றின் மூலம் நகர்ப்புர ஏழை மக்கள் பொருளாதார முன்னேற்றம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேற்கண்டவைகள் மட்டுமின்றி இன்னும் எண்ணற்ற பல மக்கள் நலத் திட்டங்கள் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருவதால், ஒளிமயமான தமிழகம் வலிமையானதாக எழுச்சி பெற்று வருகிறது.

பல்வேறு தடைகளைக் கடந்து, சாதனைகளைப் படைத்து வரும் பெண்களை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் மகளிர் தினத்தில் அவர்களின் பெருமைகளுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் இன்று (08.03.2023) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் விழா அரங்கத்தில் அமைக்கப்பட்டிருந்த சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களின் அரங்கினைப் பார்வையிட்டு, அங்கு இருந்த சுய உதவிக் குழு மகளிருடன் கலந்துரையாடினார்கள்.

மேலும்

கோயம்புத்தூர் மாநகராட்சி, வ.உ.சி மைதானத்தில் இன்று (05.03.2023) தேசிய அளவிலான மகளிர் சுய உதவிக்குழுக்கள் பொருட்களின் சாரஸ் கண்காட்சியினை மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்கள்.

மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்கள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும் வகையிலும், அவர்களின் தயாரிப்புப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், மாநில / மாவட்ட வட்டார அளவில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிப்புப் பொருட்களின் விற்பனைக் கண்காட்சிகளை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தொடர்ந்து நடத்தி வருகிறது.

ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறையானது கிராமப்புற கைவினைக் கலைஞர்கள் தங்களின் தயாரிப்புப் பொருட்களை காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் ஏதுவாக பல்வேறு மாநில அரசுகளுடன் இணைந்து நடத்தி வரும் தேசிய அளவிலான சாரஸ் கண்காட்சி கோயம்புத்தூர் மாவட்டம், அவினாசி சாலை, வ.உ.சி மைதானத்தில் இன்று 05.03.2023 முதல் 12.03.2023 வரை தினமும் காலை 10.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறவுள்ளது. மேலும், இக்கண்காட்சியில் தினந்தோறும் மாலையில் பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.

இக்கண்காட்சியில் 80அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஆந்திரா , கர்நாடகா, கேரளா, தெலுங்கனா, கோவா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 27 மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்களின் விற்பனை பொருட்களை சந்தைப்படுத்தி உள்ளனர். தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் இருந்தும் மகளிர் சுய உதவிக்குழுக்களும் விற்பனை நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ள கைவினைப்பொருட்கள், கைத்தறி புடவைகள், சணல், வாழைநார் மற்றும் துணிப்பைகள், மசாலா பொருட்கள், இயற்கை உணவு பொருட்கள், பனைவெல்லம், திண்பண்டங்கள், எண்ணெய் வகைகள், கால்மிதியடிகள், ஐம்பொன் மற்றும் அலங்கார நகைகள், மூலிகை பொருட்கள், பூஜை பொருட்கள், இயற்கை வலி நிவாரணிகள், மென்பொம்மைகள், மற்றும் கிருமிநாசினிகள் போன்ற பல்வேறு மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் பார்வைக்காகவும், விற்பனைக்காகவும் வைக்கப்பட்டுள்ளன.

இக்கண்காட்சியில் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 13 மகளிர் சுய உதவிக்குழுக்கள் கலந்து கொண்டு, தங்கள் பொருட்களை விற்பனைக்கு காட்சிபடுத்தி உள்ளனர். மேலும், ஆவின், காதி, டான் டீ போன்ற துறைகள் தங்கள் விற்பனை அரங்குகளை அமைத்துள்ளனர்.

இந்த ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டு, சிறு தானிய உணவுகளை மக்கள் அதிக அளவில் பயன்படுத்திட ஏதுவாக இக்கண்காட்சியில் விற்பனை செய்யப்படுகின்றன. பொதுமக்கள், அனைவரும் இக்கண்காட்சியினை பார்வையிட்டு, மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் வாங்கி அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும்

Page 3 of 5, showing 9 record(s) out of 40 total