partnership

கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு மூலம் சமூக செயல்பாடுகள்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் பல்வேறு அரசுத் துறைகள், அத்துறைகளின் சேவைகள் மற்றும் பலன்களை பெறுவதற்காக உள்ளமைக்கப்பட்ட வழிமுறையைக் கொண்டுள்ளது. ஒருங்கிணைப்பு முயற்சிகள் மூலம் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDGs) அடைவதில் அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் பின்வரும் நான்கு கூறுகளின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன:

அ. சமூக உள்ளாக்கம் மற்றும் சமூக மேம்பாடு

நலிவுற்றவர்கள் மற்றும் விடுபட்ட இலக்கு மக்களின் குடும்பங்களை அடையாளம் காணவும், ஒருங்கிணைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், குறிப்பாக நலிவடைந்த நிலையிலுள்ள பழங்குடியினர், பழங்குடியினர் மற்றும் பிற விளிம்புநிலை மக்களைக் கொண்டு சிறப்பு சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படுகின்றன. முதியோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகளின் சிறப்புத் தேவைகளைக் கண்டறிய, வட்டார அளவிலான தேவைகள் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு, அரசுத் திட்டங்களின் பயன்கள் விளிம்பு நிலை மற்றும் நலிவடைந்த குடும்பங்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது.

ஆ. உணவு, ஊட்டச்சத்து, ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் (FNHW)

வளமான மற்றும் தரமான வாழ்க்கைக்கு முக்கிய தேவைகளான ஆரோக்கியம், சத்தான உணவு மற்றும் சுகாதாரம் போன்றவை உணவு, ஊட்டச்சத்து, ஆரோக்கியம் மற்றும் சுகாதார (FNHW) திட்டத்தின் வாயிலாக வலியுறுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் முக்கியமான நோக்கங்கள் பின்வருமாறு

    • நல்ல ஆரோக்கியம், நல்வாழ்வுக்கான உணவு மற்றும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துதல்.
    • கர்ப்பிணிப் பெண்கள், வளர் இளம் பெண்கள், குழந்தைகளுக்கான தேவை மற்றும் உரிமைகளை பெற வழிகாட்டுதல்கள் அளித்தல்.
    • உணவு, ஊட்டச்சத்து, ஆரோக்கியம் மற்றும் சுகாதார செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக பழக்கவழக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்துதல்.

1. உணவுத் திருவிழா: 12,525 கிராம ஊராட்சிகளிலும் பாரம்பரிய உணவுப் பழக்கத்தை மீண்டும் கொண்டுவரவும், ஊக்குவிக்கவும் உணவுத் திருவிழாக்கள் நடத்தப்பட்டன. 2. ஊட்டச்சத்து நிறுவனங்கள்: உடல் வளர்ச்சி குன்றிய குழந்தைகள் மற்றும் இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆரோக்கியமான உணவை குறைந்த விலையில் கிடைக்கத்தக்க வகையில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலம் ஊட்டச்சத்து நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. 3. வீட்டு ஊட்டச்சத்து தோட்டம்: 3,000 கிராம ஊராட்சிகளில் உணவுப் பாதுகாப்பற்ற குடும்பங்கள் கண்டறியப்பட்டு, இரத்த சோகை உள்ள குடும்பங்களுக்காக வீட்டு ஊட்டச்சத்து தோட்டங்கள் அமைக்கப்பட்டன.

2022-23 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள்

மக்களை தேடி மருத்துவம் (MTM)

தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலமாக தொற்றா நோய்களை கண்டறிவதற்காக அதிக ஈடுபாட்டுடன் கூடிய சுய உதவிக் குழு உறுப்பினர்களை மகளிர் சுகாதார தன்னார்வலராக (WHV) நியமித்து மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கிராமப்புற மற்றும் நகர்ப்புரங்களில் முறையே 8,713 மற்றும் 2,256 மகளிர் சுகாதார தன்னார்வலர்கள் துணை சுகாதார மையங்களுடன் (HSC) இணைக்கப்பட்டு செயல்படுகின்றனர்

மகளிர் சுகாதார தன்னார்வலர்கள் (WHV) தொற்றா நோய்களை கண்டறிந்து, அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல் நாள்பட்ட நோயாளிகளுக்கு மருந்துகளை வீடுகளுக்கே சென்று வழங்குகிறார்கள்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் (CMBFS)

சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையுடன் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ஒரு முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களிலுள்ள அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான இத்திட்டத்தினை செயல்படுத்துவதில் மகளிர் சுய உதவிக் குழுவினர் நேரடியாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆரோக்கியமான, தரமான காலை உணவு சுய உதவிக் குழு மகளிரால் தயாரிக்கப்படுகிறது. ஊராட்சி அளவிலான சிறப்புக் குழுவால் அடையாளம் காணப்பட்ட சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு, காலை உணவை சமைப்பதற்கு சமையல் கலை நிபுணர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது. சமையல் கூடத்தின் பொறுப்பாளராக இருக்கும் சுய உதவிக் குழு சமையலர் தினமும் காலை உணவு சமைத்து, உணவு வழங்கப்பட்ட விவரங்களை கைபேசி செயலியில் பதிவேற்றுகிறார்கள். தற்போது இத்திட்டம் கிராமப்புறங்களில் உள்ள 16 மாவட்டங்களில், 963 பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது.

ஊட்டச்சத்து மாதம் மற்றும் ஊட்டச்சத்து வார கொண்டாட்டம்

சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையுடன் ஒருங்கிணைந்து சுய உதவிக் குழுக்கள் / ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மார்ச் 2022 மற்றும் செப்டம்பர் 2022 ஆம் மாதங்களில் நடைபெற்ற போஷன் மா மற்றும் போஷன் பக்வாடா பிரச்சாரங்களில் பெருவாரியாக மக்கள் பங்கேற்று இரத்த சோகை, வளர்ச்சி குறைபாடு மற்றும் ஆரோக்கியமான உணவின் முக்கியத்துவத்தை குறித்து குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் வளரிளம் பெண்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

“நம்ம ஊரு சூப்பரு” விழிப்புணர்வு பிரச்சாரம்

“நம்ம ஊரு சூப்பரு” விழிப்புணர்வு பிரச்சாரம் 2022 ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை நடத்தப்பட்டு தூய்மையான மற்றும் பசுமையான கிராமங்களை உருவாக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் சுய உதவிக் குழுக்கள் / ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுடன், கிராமங்களில் உள்ள சுய உதவிக் குழுவை சார்ந்த பெண்கள், குழந்தைகள், பொது மக்களிடையே தூய்மையான பசுமையான கிராமங்கள் உருவாக்கிட தேவையான மனமாற்றத்திற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கிராமங்களில் உள்ள அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் கிராம ஊராட்சி சேவை மையங்களை சுத்தம் செய்தல் மற்றும் மரக்கன்றுகளை நடுதல் போன்ற விழிப்புணர்வு செயல்பாடுகளில் சுய உதவிக் குழுவை சார்ந்த பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

பாலின பாகுபாடு – தடுப்பு முயற்சிகள்

குழந்தை திருமணம், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை, பாலியல் வன்கொடுமை போன்றவற்றைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு சுய உதவிக் குழுவிலும் ஒருவர் ‘நம் தோழி’ (GPP) என நியமிக்கப்பட்டுள்ளனர். பாலினம் தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும், கண்காணிக்கவும் ஒவ்வொரு ஊராட்சியிலும், வட்டாரத்திலும் சமுதாய வளப் பயிற்றுநர்கள் மற்றும் வட்டார வள பயிற்றுநர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் 5,718 சமூக செயல்பாட்டுக் குழுக்கள் மற்றும் 180 வட்டார அளவிலான பாலின மன்றங்கள் உருவாக்கப்பட்டு பாலினப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக வலுப்படுத்தப்பட்டு உள்ளன.

பாலின வன்முறைக்கு எதிரான பிரச்சாரம்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்காக, பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பிற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, ஒரு மாத கால பிரச்சாரம் 23 டிசம்பர் 2022 வரை நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் ஒற்றுமை பேரணிகள், குறும்படங்கள், திரைப்படங்கள் திரையிடல், பெண் உரிமை தொடர்பான விவாதங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஊரக உள்ளாட்சி அமைப்புகள் - சமுதாயம் சார்ந்த அமைப்புகள் (PRI-CBO) ஒருங்கிணைப்பு

கிராம ஊராட்சி மற்றும் வட்டார அளவிலான உள்ளாட்சி அமைப்புகளானது பல்வேறு அரசு திட்டங்களை செயல்படுத்துவதிலும் அதற்குரிய பயனாளிகளை தேர்வு செய்வதிலும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கமானது ஊரக உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து, இலக்கு மக்கள் மற்றும் நலிவுற்றோர்களை உள்ளடக்கிய சமூக உள்ளாக்கம் மற்றும் சமூக மேம்பாட்டின் இலக்குகளை அடைவதற்காக சமுதாயம் சார்ந்த அமைப்புகளான ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் வழியாக அதன் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தி வருகிறது.

ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சமூகம் சார்ந்த அமைப்புகளின் ஒருங்கிணைப்பு முயற்சியின் மூலம் அனைத்து மகளிர் சுய உதவிக் குழுக்களும் கூட்டமைப்புகளும் கீழ்கண்ட நான்கு தலைப்புகளின் கீழ் அவர்களுக்கான கிராம வறுமைக் குறைப்புத் திட்டத்தை (VPRP) தயாரிக்கக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது:

  • உரிமைத் திட்டம்
  • வாழ்வாதாரத் திட்டம்
  • பொது பொருட்கள் மற்றும் சேவைகள் திட்டம்
  • சமூக மேம்பாட்டுத் திட்டம்

2022-23 ஆம் ஆண்டில், கிராம வறுமை குறைப்புத் திட்டம் 12,524 கிராம ஊராட்சிகளிலும் தயாரிக்கப்பட்டு, கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்துடன் (GPDP) ஒருங்கிணைத்து கிராம சபையில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது