சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா இன்று (08.03.2023) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் மாநில அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, குழு நடனம் மற்றும் குழுப் பாடல் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி விழாப் பேருரையாற்றினார்.
கிராமப் பகுதியில் வசிக்கும் ஏழை எளிய பெண்களை சுய உதவிக் குழுவாக ஒருங்கிணைத்து, அதன் மூலம் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் சுய சார்புத்தன்மை ஆகியவற்றில் பெண்களின் நிலையை மேம்பாடு அடையச் செய்யும் நோக்கத்துடன் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தி வருகிறது.
தற்போது தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வழிகாட்டுதலில் நலிவுற்றோரை ஒருங்கிணைத்து சிறப்புக் குழுக்கள், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்களைக் கொண்ட குழுக்கள் போன்றவை அமைக்கப்பட்டு, அவைகளுக்கு சுழல் நிதி, நலிவுற்றோர் மேம்பாட்டு நிதி மற்றும் சமுதாய மேம்பாட்டு நிதி ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றது. இதுவரை 8,23,825 சுய உதவிக் குழுவினருக்கு ரூ. 44,840 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
மேலும் மகளிர் மற்றும் குழந்தைகளின் ஊட்டச் சத்தினை உறுதி செய்திட மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களின் வீட்டின் பின்புறத்தில் ஊட்டச் சத்துத் தோட்டம் அமைத்து, இத்தோட்டத்தில், இயற்கை முறையில் பலன் தரும் சத்தான காய் கனிகள் மற்றும் சிறுதானியங்கள் கொண்ட பயிர் வகைகளை வளர்க்க ஏதுவாக ஊட்டச் சத்துத் தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புரங்களில் உள்ள ஏழை எளிய மக்களின் வாழ்வாதார வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் அமைக்கப்படும் சுய உதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் ஆகியவற்றின் மூலம் நகர்ப்புர ஏழை மக்கள் பொருளாதார முன்னேற்றம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேற்கண்டவைகள் மட்டுமின்றி இன்னும் எண்ணற்ற பல மக்கள் நலத் திட்டங்கள் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருவதால், ஒளிமயமான தமிழகம் வலிமையானதாக எழுச்சி பெற்று வருகிறது.
பல்வேறு தடைகளைக் கடந்து, சாதனைகளைப் படைத்து வரும் பெண்களை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் மகளிர் தினத்தில் அவர்களின் பெருமைகளுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் இன்று (08.03.2023) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் விழா அரங்கத்தில் அமைக்கப்பட்டிருந்த சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களின் அரங்கினைப் பார்வையிட்டு, அங்கு இருந்த சுய உதவிக் குழு மகளிருடன் கலந்துரையாடினார்கள்.