சமூக ஒருங்கிணைப்பு மற்றும் நிறுவன கட்டமைப்பு

சமூக ஒருங்கிணைப்பு மற்றும் நிறுவன கட்டமைப்பு (SM&IB)

SMIB

சமூக ஒருங்கிணைப்பானது தகுதியுள்ள மகளிரை சுய உதவிக் குழுக்களில் இணைத்து அல்லது குழுக்களாக அமைத்து, அவற்றிற்கு நிதி ஒழுக்கம் மற்றும் ஜனநாயக ரீதியாக முடிவு எடுப்பதன் மூலம் ஏழைகளுக்கான நிறுவனமாக மேம்படுத்துவதை உறுதி செய்கிறது. இக்குழுக்களால் முறையான கூட்டங்களை நடத்துதல், முறையான சேமிப்பு, உள்கடன் வழங்குதல், முறையான உள்கடன் திருப்பம் மற்றும் முறையான கணக்கு பதிவேடுகளை பராமரித்தல் ஆகிய 5 முக்கிய கோட்பாடுகள் கடைபிடிக்கப்படுகிறது.

சுய உதவிக் குழுக்கள் அமைத்தல்

SMIB

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மிகவும் ஏழை, ஏழை, மாற்றுத்திறனாளிகள், நலிவுற்றோர், பழங்குடியினர் மற்றும் விளிம்பு நிலையிலுள்ள மக்கள் அனைவரையும், மக்கள் பங்கேற்புடன் கூடிய மக்கள் நிலை ஆய்வு மூலம் ஏழைகள் அடையாளம் காணப்பட்டு, விடுபட்ட ஏழைக் குடும்பங்களிலுள்ள மகளிரை ஏற்கனவே உள்ள சுய உதவிக் குழுக்களிலோ அல்லது புதியதாக அமைக்கப்பட உள்ள சுய உதவிக் குழுக்களிலோ இணைக்கப்படுகின்றனர்.

சுய உதவிக் குழுக்களின் ஊக்குநர் மற்றும் பிரதிநிதிகளுக்கு கூட்டாக முடிவெடுத்தல் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான வங்கி கடன் இணைப்பு பெறுதல் உள்ளிட்ட நிர்வாகம் மற்றும் நிதி மேலாண்மை பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

சமுதாயம் சார்ந்த அமைப்புகள்

இவ்வியக்கத்தின் கூறுகளை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம், வட்டார அளவிலான கூட்டமைப்பு, மக்கள் கற்றல் மையம் போன்ற சமுதாயம் சார்ந்த அமைப்புகளை சார்ந்துள்ளது. இத்திட்டத்தின் நோக்கங்களை அடைந்திட இந்த அமைப்புகளானது ஒரு வலுவான தூணாக செயல்படுகிறது.

ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு

ஊராட்சி அளவில், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஊராட்சியிலுள்ள அனைத்து சுய உதவிக் குழுக்களும் கூட்டமைப்பின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டம், 1975-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளானது, திட்டத்திற்கும் கிராம மக்களுக்கும் இடையே ஒரு முக்கியமான இணைப்பு பாலமாக செயல்படுகிறது. அதன் முக்கிய செயல்பாடாக குறைந்த வட்டியில் கடன்கள் மற்றும் அரசு திட்டங்களின் பயன்களை பெற்று தருவதாகும்.

ஊராட்சி அளவிலான கூட்டமைப்பானது கீழ்க்கண்ட நான்கு கருப்பொருட்களில் துணைக் குழுக்களை அமைத்து செயல்படுத்தி வருகிறது.

1. குழு அமைத்தல் மற்றும் வலுப்படுத்துதல்.

2. கடன் இணைப்பு மற்றும் கண்காணிப்பு.

3. வாழ்வாதார மேம்பாடு.

4. சமூக பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல்.

SMIB

கிராம வறுமை ஒழிப்புச் சங்கம்

கிராம வறுமை ஒழிப்புச் சங்கமானது, இலக்கு மக்கள் மற்றும் நலிவுற்றோரை உள்ளடக்கிய தன்னாட்சி அமைப்பாகும். இச்சங்கம் 11 முதல் 19 உறுப்பினர்களை உள்ளடக்கியதுடன், இலக்கு மக்கள் குடும்பங்களை கண்டறிந்து, அவர்களை வறுமையில் இருந்து மீட்பதற்காக தனிநபர் கடன் வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், இது அவர்களின் நலிவுநிலையைக் குறைக்க உதவுகின்றது. கிராம ஊராட்சித் தலைவர் இச்சங்கத்தின் பதவி வழி தலைவராக உள்ளார்.

சமூகத் தணிக்கை குழு

<pஅனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்கு 5 பொதுக் குழு உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழுவே சமூகத் தணிக்கை குழு ஆகும். இக்குழுவானது, கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் செயல்பாடுகளை கண்காணித்து கிராம சபைக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கும்.

வட்டார அளவிலான கூட்டமைப்பு

ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களின் பிரதிநிதிகளை உறுப்பினர்களாக கொண்டு 388 வட்டாரங்களிலும் அமைக்கப்பட்ட, பதிவு செய்யப்பட்ட ஒரு அமைப்பாகும். இந்த அமைப்பானது ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் செயல்பாடுகள் அனைத்தையும் வட்டார அளவில் செயல்படுத்துகிறது. கூடுதலாக சமுதாய வளப்பயிற்றுநர்களுக்கு வட்டார அளவிலான திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் மையமாகவும் செயல்படுகிறது.