நிதி உள்ளாக்கம் மற்றும் கடன் பெறுவதற்கான வழி வகை

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனமானது, நிதி உள்ளாக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் நிதி கல்வியறிவு, வங்கி சேமிப்பு கணக்கு துவங்குதல், வங்கி கடன் பெறுவதற்கான வழிவகைகள் காப்பீடு மற்றும் ஓய்வூதிய சேவைகள் ஆகிய நிதி சேவைகளை ஏழைகளுக்கு வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

நிதிசார் கல்வி

நிதிசார் கல்வி என்பது மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கும், ஏழை மற்றும் பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ள குடும்பத்தினருக்கு நிதி சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், நிதிசார் திறனை வளர்ப்பதற்கும், பல்வேறு நிதி சேவைகளை எளிதில் அணுகுவதற்கு வழிவகை செய்வதன் மூலம் தகவல் இடைவெளியைக் குறைப்பதற்கும் முக்கியமான ஒன்றாகும். நிதி கல்வியறிவை மேம்படுத்தவும், திட்ட மானியங்கள், வட்டி மானியம் மற்றும் வங்கி கடன் ஆகியவை இலக்கு மக்களை அதிக அளவில் சென்றடைவதை உறுதி செய்யவும் இவ்வியக்கமானது உறுதி பூண்டுள்ளது.

நிதிசார் கல்வி முகாம்கள் பின்வரும் ஆறு தலைப்புகளின் கீழ் நடத்தப்படுகின்றன:

  • நிதிசார் திட்டமிடல்:

வாழ்க்கை தேவைகள், செலவினங்கள் போன்றவை.

  • சேமிப்பு:

எங்கு சேமிப்பது, எப்படி சேமிப்பது, தனிப்பட்ட சேமிப்பு வங்கிக் கணக்கை செயல்படுத்துதல், வங்கிக் கணக்கு மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்ளுதல் போன்றவை.

  • கடன்:

வங்கிக் கடன், அதன் பயன்பாடு, வாராக்கடன் பற்றிய விழிப்புணர்வு போன்றவை.

  • காப்பீட்டு கல்வியறிவைப் பரப்புதல்:

ஒன்றிய மற்றும் மாநில அரசின் பல்வேறு காப்பீடு திட்டங்களில் பதிவு செய்ய வசதிகளை ஏற்படுத்துதல்.

  • ஓய்வூதியம்:

நீண்ட கால நிதி திட்டமிடலின் தேவை, பல்வேறு ஓய்வூதிய திட்டங்கள் எளிதில் கிடைக்கச் செய்தல்.

  • மின்னணு நிதி சேவை:

மின்னணு பரிமாற்ற முறையினை ஊக்குவித்து, இருப்பிடம் அருகாமையில் பண பரிமாற்றத்தினை வங்கி வணிக தொடர்பாளர்கள் மூலம் செயல்படுத்துதல்.

நிதி உள்ளாக்கம் மற்றும் கடன் பெறுவதற்கான வழி வகை

கடன் பெறும் உரிமையானது, எளிதாக கடன் பெறுதல், சரியான நேரத்தில் போதுமான அளவு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெறுதல் ஆகியவற்றின் மூலம் உறுதி செய்யப்படுகிறது. சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு வழங்குவதன் மூலம் கிராமப்புற ஏழை மக்களிடையே நிதி உள்ளாக்கத்தை கொண்டு செல்வது தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் முக்கியமான பொறுப்புகளில் ஒன்றாகும்.

சுய உதவிக் குழுக்கள் அவர்களின் தேவைகளின் அடிப்படையில், தவணை கடன் (Term Loan) அல்லது ரொக்கக் கடன் (Cash Credit limit) அல்லது இரண்டு வகை கடன்களையும் பெற்றுக்கொள்ளலாம். தவணை கடனானது குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் செலுத்தப்பட வேண்டும். ரொக்கக் கடனானது, குறைந்தபட்சம் ரூ.6.00 இலட்சம் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்பட்டு, வருடத்திற்கு ஒரு முறை வரையறுக்கப்பட்ட அளவின்படி (Yearly Drawing Power) 3 ஆண்டுகள் வரை திரும்ப செலுத்த அனுமதிக்கப்படுகிறது.

குறு தொழில்களுக்கான கடன் உத்திரவாத நிதியானது (CGFMU), முதிர்ச்சி அடைந்த சுய உதவிக் குழுக்களின் நிதி தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு, ரூ.10.00 இலட்சம் முதல் ரூ.20.00 இலட்சம் வரை வழங்கப்படுகிறது. மேலும், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பானது, சுய உதவிக் குழுக்களுக்கிடையே பாலமாக செயல்பட்டு, அதிக வட்டியில் கடன் வழங்கும் தனி நபர்களின் பிடியிலிருந்து சுய உதவிக் குழு உறுப்பினர்களை பாதுகாக்கிறது.

சுய உதவிக் குழுக்களுக்கு வட்டி மானியம்

ஊரகப் பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வட்டி மானியம் திட்டமானது (ISS) கீழ்க்கண்டவாறு வரையறுக்கப்பட்டுள்ளது:

  • ரூ.3.00 இலட்சம் வரையிலான கடன்களுக்கு மண்டல கிராமப்புற வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் ஆண்டுக்கு 7% வட்டி விகிதத்தில் கடன் வழங்கும்
  • ரூ.3.00 இலட்சம் முதல் ரூ.5.00 இலட்சம் வரையிலான கடன்களுக்கு மண்டல கிராமப்புற வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் ஆண்டுக்கு 10% வட்டி விகிதத்தில் கடன் வழங்கும் (அல்லது வங்கியின் குறைந்தபட்சம் வட்டி விகிதத்தில் (MCLR) எது குறைவோ).

சமுதாய பங்கேற்புடன் கடன் வசூலிக்கும் முறை

சமுதாய பங்கேற்புடன் கடன் வசூலிக்கும் முறையானது (CBRM) உரிய காலத்தில் கடனை திரும்ப செலுத்துவதற்கும், வாரா கடன் (NPA) ஏதேனும் இருப்பின் அதனை வசூலிப்பதற்கும் சுய உதவிக் குழுக்களுக்கும் வங்கிகளுக்கும் உதவுகிறது. அனைத்து வங்கிக் கிளைகளிலும் கிளை மேலாளர், இவ்வியக்கத்தின் அலுவலர்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் சுய உதவிக் குழு பிரதிநிதிகளைக் கொண்டு சமுதாய பங்கேற்புடன் கடன் வசூலிக்கும் முறை (CBRM) அமைக்கப்பட்டுள்ளது.

காப்பீடு மற்றும் ஓய்வூதிய திட்டங்கள்

சுய உதவிக் குழு குடும்பங்கள் பல்வேறு இடர்பாடுகளால் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலையில், அவர்களை ஒன்றிய மற்றும் மாநில அரசின் காப்பீடு மற்றும் ஓய்வூதிய திட்டங்களில் இணைப்பது அவசியமாகிறது.

100% தகுதியுள்ள அனைத்து சுய உதவிக்குழு உறுப்பினர்களையும் ஆயுள் காப்பீடு, விபத்துக் காப்பீடு மற்றும் உடல்நலக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சேர்ப்பதே அரசாங்கத்தின் முயற்சியாகும்.

தகுதியான நபர்கள், இறப்பு/விபத்து ஏற்படும் பட்சத்தில் இழப்பீடு தொகையினை கண்காணித்து பெற்று வழங்குவதற்கு சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியும் மகளிர் அடல் பென்சன் யோஜனா (APY) திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதுவரை, 14,688 தகுதியான சுய உதவிக் குழு உறுப்பினர்கள் அடல் பென்சன் யோஜனா (APY) திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.