வாழ்வாதாரம்

பண்ணை சார் வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகள்

பண்ணை மகளிர் குடும்ப வருமானத்தினை படிப்படியாக அதிகரிப்பது இந்த திட்டத்தின் நோக்கமாகும். தொடர்ச்சியாக வருமானம் பெறுவதற்கு தேவையான தொடர் நடவடிக்கைகள் இந்த திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தகுதியான ஊரக ஏழை குடும்பங்களில் உள்ள மகளிர், மக்கள் நிலை ஆய்வில் கண்டறியப்பட்டவர்களில் நலிவுற்றோர், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், மாற்றுத் திறனாளி, முதியோர் மற்றும் சிறுபான்மையினர் போன்றவர்கள் இந்த திட்டத்தில் பங்கேற்க தகுதி உள்ளவர்கள் ஆவார்கள்.

சுய உதவிக் குழுக்கள் ஏற்படுத்துதல்

lp

அனைத்து வாழ்வாதார நடவடிக்கைகளும் குழு அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்படும். முறையான சேமிப்பின் மூலம் திறம்பட குழுக்களில் பங்கேற்பது, உற்பத்தித் திறனை அதிகரிப்பது மற்றும் வேளாண்மையை அடிப்படையாக கொண்ட வாழ்வாதாரத்தினை ஏற்படுத்தி அதனை தொடர்ந்து செயல்படுத்துதல் இதன் நோக்கமாகும். மகளிர் குழுக்களை தங்களின் பண்ணைகளுக்கு தேவையான இடுபொருட்களை கூட்டு கொள்முதல் செய்யவும், விளை பொருட்களை கூட்டு சந்தைபடுத்துதல் செய்யவும் ஊக்குவிக்கப்படுவார்கள். மக்கள் நிலை ஆய்வில் கண்டறியப்பட்டவர்களின் அடிப்படை விவரங்கள் சேகரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் இந்த குழுக்களில் இணைக்கப்படுவார்கள்.

பண்ணை, பண்ணை சார்ந்த மற்றும் பண்ணை சாரா தெழில்கள்

சாகுபடி செய்ய தகுதி உள்ள நிலங்களை உடைய கிராமப்புற பண்ணை மகளிர் பண்ணைத் தொழில்களை மேற்கொள்ளலாம். சாகுபடி நிலம் உள்ள மற்றும் நிலமற்ற மகளிர் பண்ணை சார்ந்த தொழில்களை மேற்கொள்ளலாம். பண்ணை நிலமற்ற அல்லது பண்ணை நிலங்களை அணுக வாய்ப்பு இல்லாதவர்கள் பண்ணை சாரா தொழில்களை மேற்கொள்ளலாம். மகளிர் சுய உதவிக்குழுக்களில் உள்ள மகளிர் இந்த நடவடிக்கைகளில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

வாழ்வாதார திறன் மேம்பாட்டு பயிற்சி

lp

முன்னோடி தொழில் நுட்பங்களில் திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் செயல்விளக்கங்கள் செய்து காட்டப்படும். பயிர்வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, அங்கக வேளாண்மை, ஊட்டச்சத்து காய்கறி தோட்டம் அமைத்தல், பூச்சி மருந்தில்லா மேலாண்மை மேற்கொள்ள உயிரியல் இடுபொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை ஆகியவற்றுக்கு உரிய திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்று தங்களின் வருமானத்தினை பெருக்கிக் கொள்ளலாம்.

இயற்கை வேளாண் தொகுப்புகள் ஏற்படுத்துதல்

தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், வேளாண் சாகுபடியில் நீடித்த நிலைத்த இயற்கையான சாகுபடி முறைகளையும், முன்னோடியான கால்நடை பாரமரிப்பு முறைகள், மரம் நீங்கலான வனப்பொருட்களை சேகரித்தல் மற்றும் மதிப்புக் கூட்டுதல் போன்றவற்றின் மூலமாக ஏழை எளிய மக்களின் வாழ்வாதார முறைகளை வலுப்படுத்தி வருகிறது. விவசாயிகளை அடுத்த நிலைக்கு முன்னேற்றுவதற்கு இயற்கை வேளாண்மை சான்று பெறுவதும், சந்தைப்படுத்துதலில் இலாபகரமான விலை பெறவும் வழிவகை செய்ய வேண்டும்.

இயற்கை வேளாண் தொகுப்புகள் கீழே கண்ட நன்கு வரையறுக்கப்பட்ட திட்ட செயலாக்க நடவடிக்கைகள் மூலம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளன.

 • இயற்கை விவசாயம் செய்ய ஆர்வமுள்ள விவசாயிகளைக் கொண்ட அருகாமையில் உள்ள தொகுப்பு கிராமங்களை தேர்வு செய்வது.
 • ஆர்வமுள்ள மகளிர் விவசாயிகளை தேர்வு செய்வது
 • அங்ககச் சான்றிதழ் (Organic Certification) வழங்கும் நடைமுறை தமிழ்நாடு அங்ககச் சான்றிதழ் துறையுடன் சேர்ந்து இயற்கை வேளாண் தொகுப்பின் பயனாளிகளுக்கு அங்கக வேளாண்மை பயிற்சியும், அங்கக சான்றிதழ் வழங்கும் நடைமுறையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 • இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள், சமுதாய வள பயிற்றுநர்கள் மற்றும் பெண் விவசாயிகளுக்கு உரிய திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குதல்.

உற்பத்தியாளர் குழுக்கள் அமைத்தல்

வாழ்வாதார நடவடிக்கைகளின் முக்கிய நோக்கம் கிராமப்புற குடும்பங்களின் வருமானத்தினை அதிகரிப்பதே ஆகும். கூட்டு கொள்முதல், கூட்டு பேரம் பேசுதல் மற்றும் கூட்டு சந்தைபடுத்துதல் ஆகியவற்றுக்கு உற்பத்தியாளர்களை உற்பத்தியாளர் குழுக்களாக உருவாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதனால் உற்பத்தி செய்யும் வேளாண் விளைபொருட்களை அருகாமையில் உள்ள சந்தைகளில் சந்தைப்படுத்தும் நடவடிக்கைகளில் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்பட்டு தொடர் வருமானம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சுய உதவிக்குழு உறுப்பினர்கள் அனைவரும் இந்த குழுக்களில் திட்ட விதிகளுக்கு உட்பட்டு பங்கேற்கலாம்.

ஊட்டச்சத்து தோட்டம் நிறுவுதல்

தற்போதுள்ள சந்தையில் போட்டியிட்டு நீடிக்கவும், மதிப்புக்கூட்டு சங்கிலியில் உள்ள வாய்ப்புகளைக் கண்டறிந்து அவற்றை திறம்பட தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும் ஏதுவாக உழவர் உற்பத்தியாளர்களை ஒருங்கிணைத்து உற்பத்தியாளர் நிறுவனங்கள் உருவாக்கப்படவுள்ளது. இந்த உற்பத்தியாளர் நிறுவனங்கள் கம்பெனி/ கூட்டுறவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும். இத்தகைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உயரிய சேவைகள் வழங்கும் விதமாக, சுத்திகரிப்பு, அறுவடை பின்செய் நேர்த்தி, தேவைப்படும் இடுபொருள் வாங்கி வழங்குதல், சந்தைப்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டுதல் மற்றும் இதர பிற சேவைகளையும் வழங்கி விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கிட உதவிடும். 2019- 20ம் ஆண்டு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதர இயக்க மூலம் 60 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளை (FPO) உருவாக்க இலக்கு வழங்கப்பட்டது. இந்த இலக்கு தற்பொது நிறைவு செய்யப்பட்டு மத்திய அரசின் 10000 விவசாய உற்பத்தியாளர் அமைப்பு (FPO) உருவாக்கும் திட்டத்தின் கீழ் நபார்டு வங்கி மற்றும் தேசிய கூட்டுறவு மேம்பாட்டு நிறுவனத்துடன் ஒருங்கினைந்து விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஊட்டச்சத்து காய்கறி தோட்டம் அமைத்தல்

கிராமப்புறங்களில் ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கவும், சரிவிகித உணவினை எடுத்துக்கொள்வதை உறுதி செய்யவும் வீடுகளில் உள்ள சிறிய அளவிளான இடங்களில் காய்கறி தோட்டம் அமைக்க இந்த திட்டம் வழிவகுக்கிறது. இதற்கான பயிற்சி ஊராட்சி அளவில் சமுதாய வள பயிற்றுநர்களால் அளிக்கப்பபடும்.

ஒருங்கினைந்த பண்ணை தொகுப்புகள்

வேளாண்மை தொழில்களிலிருந்து நிலையான வருமானம் பெறுவதற்காக வேளான் மகளிர் விவசாயிகள் தொழிலுடன் கால்நடை வளர்ப்பையும் சேர்த்து ஒருங்கினைந்த பண்ணை முறை விவசாயத்தை மேற்கொள்ள ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. ஓவ்வொரு ஒருங்கிணைந்த பண்ணை தொகுப்புகளின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணை அமைப்பு உருவாக்கப்படும்.

ஓவ்வொரு ஒருங்கிணைந்த பண்ணை தொகுப்பிலும் இயந்திர வாடகை மையம், இயற்கை விவசாய இடுபொருட்களை தயாரித்து விற்பனை செய்யக் கூடிய அங்காடி, விவசாயத்துடன் கறவை மாடுகள் வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு போன்றவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பண்ணை, தாவர மற்றும் மண் மாதிரிகளில் பூச்சி மருந்து மற்றும் இரசாயன உரங்களின் மிச்சத்தினை கண்டுபிடிப்பதற்கான பண்ணை ஆய்வுக்கூடம் ஆகியவை இருக்கும்.

தகுதி

பண்ணை மற்றும் பண்ணை சார்ந்த தொழில்களை மேற்கொள்ள கூடிய சுய உதவிக் குழு உறுப்பினர் குடும்பங்கள்

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்

lp
 • ஊராட்சி அளவில் - சமூக வள பயிற்றுநர்
 • வட்டார அளவில் - வட்டார இயக்க மேலாளர்
 • மாவட்ட அளவில் - திட்ட இயக்குநர்
 • மாநில அளவில் - முதன்மை செயல் அலுவலர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்

கிராமிய தொழில் முனைவோர் திட்டம்

கிராமிய தொழில் முனைவோர் திட்டம் என்பது பண்ணை சாரா வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் முதல் கட்டமாக, திருப்போரூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) மற்றும் உளுந்தூர்பேட்டை (விழுப்புரம் மாவட்டம்) ஆகிய இரண்டு ஒன்றியங்களில் ரூ.10.18 கோடி நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 3,096 குறுந்தொழில்கள் துவங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டமாக இத்திட்டம், திருமங்கலம் (மதுரை மாவட்டம்) மற்றும் இராசிபுரம், வெண்ணத்தூர் (நாமக்கல் மாட்டம்) போன்ற இரண்டு வட்டாரங்களில் செயல்படுத்த மத்திய ஊரக வளர்ச்சி துறை அனுமதி பெறபட்டு, இவ்விரண்டு வட்டாரங்களிலும் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.

பயிற்சி பெற்ற தொழில் மேம்பாட்டு சமுதாய வள பயிற்றுநர்கள், கிராமப்புறங்களில் இலாபமும், வேலை வாய்ப்பும் ஈட்டித்தரக் கூடிய, சேவை, உற்பத்தி மற்றும் வணிகம் ஆகிய துறைகளில் தொழில் வாய்ப்புகளை கண்டறிய உதவுவார்கள். சுய உதவிக் குழு உறுப்பினர்களால், தேர்வு செய்யப்பட்ட தொழிலில் அவர்களுக்கு உள்ள ஆர்வம் மற்றும் அடிப்படை அறிவை வைத்து அவர்களுக்குத் தேவையான வணிகத் திட்டத்தை சமுதாய வள பயிற்றுநர் மூலம் (தொழில் மேம்பாடு) தயாரித்து வழங்கப்படும். பயனாளிகளுக்கு தேவையான வழிகாட்டுதலையும் ஆதரவையும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உருவாக்கி செயல்படுத்தும்.

தொழில் திட்டம் ஒப்புதல் ஆன பிறகு அத்தொழில் துவங்குவதற்குத் தேவையான நிதியை, சமுதாய முதலீட்டு நிதி அல்லது சமுதாய தொழில் நிதி மூலமும் மற்றும் முத்ரா கடன் மூலமும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் பண்ணை சாரா நிறுவனங்களை ஊக்குவித்தல்

தேசிய ஊரக பொருளாதார புத்தாக்கத் திட்டம் மற்றும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்டங்களின் கீழ் பண்ணை சாரா தொழில் நிறுவனங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஓரிட சேவை மையம் மற்றும் வட்டார வணிக வள மையம் மூலம் தனிநபர் மற்றும் குழு தொழில் நிறுவனங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தொழில் முனைவோருக்கு தேவையான உதவியளிக்க திறன் கொண்ட தொழில் வல்லுநர்கள் மற்றும் சமுதாய வள பயிற்றுநர்கள் - தொழில் மேம்பாடு ஆகியோர்களை உள்ளடக்கியதாக ஓரிட சேவை மையம் மற்றும் வட்டார வணிக வள மையங்கள் விளங்கும். தொழில் முனைவோர்களுக்கு சாத்தியமான தொழில் வாய்ப்புகளை அடையாளம் காணவும், வணிகத் திட்டத்தை தயாரிக்கவும், சமூக நிறுவன நிதி அல்லது வங்கிக் கடனை பெற்றுத்தரவும் ஆவண செய்யப்படும்.

தேசிய தொழில் நுட்ப நிறுவனம் (NIT), திருச்சி 150 பெரிய தொழில் நிறுவனங்களுக்கு "காப்பாளர்" அமைப்பு உருவாக்கப்பட்டு அப்பகுதியில் ஏற்கனவே சிறப்பாக செயல்படும் நிறுவனங்களை போலவே புதிய நிறுவனங்களை வளர்ச்சியடைய உதவும்.

2021-22ஆம் நிதி ஆண்டில் 8250 பண்ணை சாரா தொழில் நிறுவனங்களை, ஓரிட சேவை மையம் மற்றும் வட்டார வணிக வள மையம் மூலம் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 150 தொழில் நிறுவனங்கள் இன்குபேட்டர் மூலம் மேம்படுத்தபடும் மற்றும் 144 சிறிய தொகுப்பு நிறுவனங்கள் உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. (ஆயத்த ஆடை தயாரிப்பு தொழில் தொகுப்பு மற்றும் இதர சிறிய தொழில் தொகுப்பு).

தகுதி:

பண்ணை சாரா தொழில்களை மேற்கொள்ள கூடிய சுய உதவிக் குழு உறுப்பினர் குடும்பங்கள்.

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்

 • ஊராட்சி அளவில் - சமூக வள பயிற்றுநர்
 • வட்டார அளவில் - வட்டார இயக்க மேலாளர்
 • மாவட்ட அளவில் - திட்ட இயக்குநர்
 • மாநில அளவில் - முதன்மை செயல் அலுவலர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்