சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையுடன் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ஒரு முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களிலுள்ள அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான இத்திட்டத்தினை செயல்படுத்துவதில் மகளிர் சுய உதவிக் குழுவினர் நேரடியாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆரோக்கியமான, தரமான காலை உணவு சுய உதவிக் குழு மகளிரால் தயாரிக்கப்படுகிறது. ஊராட்சி அளவிலான சிறப்புக் குழுவால் அடையாளம் காணப்பட்ட சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு, காலை உணவை சமைப்பதற்கு சமையல் கலை நிபுணர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது. சமையல் கூடத்தின் பொறுப்பாளராக இருக்கும் சுய உதவிக் குழு சமையலர் தினமும் காலை உணவு சமைத்து, உணவு வழங்கப்பட்ட விவரங்களை கைபேசி செயலியில் பதிவேற்றுகிறார்கள். தற்போது இத்திட்டம் கிராமப்புறங்களில் உள்ள 16 மாவட்டங்களில், 963 பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது.