திறன் வளர்ப்பு
CB

எந்தவொரு சமுதாய மேம்பாட்டு திட்டத்தின் நிலைத்த தன்மைக்கும் சமூக மூலதனம் ஒரு மிகப்பெரிய சொத்தாகும். சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களை வழிநடத்தும் கூட்டமைப்பு நிர்வாகிகளின் திறமையையும், தகுதியையும் மேம்படுத்துவன் மூலம் இதனை அடைய முடிகிறது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்டப் பணியாளர்கள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கு வளப் பயிற்றுநர்களால் பல்வேறு திட்ட கருப்பொருளில் மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

சமுதாய வளப் பயிற்றுநர்கள்

சுய உதவிக் குழு உறுப்பினர்களைக் கொண்டு சமுதாய வளப் பயிற்றுநர்கள் உருவாக்கப்படுகின்றனர். கிராம அளவிலோ அல்லது ஓரிரு கிராமங்களை ஒருங்கிணைத்தோ கீழ்க்கண்ட செயல்பாட்டிற்காக பயன்படுத்தப்படுகின்றனர்:

   • சமுதாய சுய உதவிக் குழு பயிற்றுநர்கள் (CST)

சுய உதவிக் குழு அமைத்தல் மற்றும் கண்காணித்தலுக்கு உதவுதல்

    • சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் (CBC).

சுய உதவிக் குழுக்கள் கடன் பெறுவதற்காக வங்கிகளுடன் இணைந்து செயல்படுதல்.

     • சமுதாய வளப் பயிற்றுநர்கள் (பண்ணை)

சுய உதவிக் குழு மகளிரின் பண்ணை சார்ந்த செயல்பாடுகளுக்கு உதவுதல்.

     • சமுதாய வளப் பயிற்றுநர்கள் (தொழில் மேம்பாடு)

சுய உதவிக் குழு மகளிரின் தொழில் மேம்பாட்டிற்கு உதவுதல்.

     • சமுதாய வல்லுநர்கள் (வேலைவாய்ப்பு)

திறன் பயிற்சிக்காக இளைஞர்களை தெரிவு செய்தல் மற்றும் ஒருங்கிணைத்தல்.

     • vi) சமுதாய வளப் பயிற்றுநர்கள் (கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு)

அரசின் பல்வேறு நலத்திட்டங்களை சுய உதவிக் குழு உறுப்பினர்கள் பெறுவதற்கு உதவுதல்.

சுய உதவிக் குழுக்களுக்கான நிதியுதவி

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு நிதி உதவிகளானது கீழ்க்கண்டவாறு:

சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி

மூன்று மாதம் நிறைவு பெற்று தரமதிப்பீடு செய்யப்பட்ட சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதியாக குழு ஒன்றுக்கு ரூ.15,000/- வீதம் வழங்கப்படுகிறது. இச்சுழல் நிதியானது அவர்களை ஊக்குவிப்பதற்கு ஒரு காரணியாகவும், அவர்களின் சேமிப்போடு தொகுப்பு நிதியை அதிகப்படுத்தி அதிகமான உறுப்பினர்கள் உள்கடன் பெறுவதற்கும் வழிவகை செய்கிறது

சமுதாய முதலீட்டு நிதி

சமுதாய முதலீட்டு நிதி 6 மாதங்கள் நிறைவடைந்த சுய உதவிக் குழுக்களின் பொருளாதார செயல்பாட்டிற்கு கடனாக வழங்கப்படுகிறது. ஒரு சுய உதவிக் குழுவிற்கு அதிகபட்சமாக ரூ.1.50 இலட்சம் கடன் தொகையாக குறைந்த வட்டி விகிதத்தில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் மூலம் வழங்கப்படுகிறது. இந்நிதியை அவர்களின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திய பிறகு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு திரும்ப பெறப்பட்டு, அதே கிராம ஊராட்சியிலுள்ள பிற சுய உதவிக் குழுக்களுக்கு கடனாக சுழற்சி முறையில் மீண்டும் வழங்கப்படுகிறது.

நலிவு நிலை குறைப்பு நிதி

நலிவு நிலை குறைப்பு நிதியானது நலிவுற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான உணவு பாதுகாப்பு, வாழ்வாதார செயல்பாடுகள் மற்றும் எதிர்பாராத செலவினங்களுக்கு (உடல் நலக்குறைவு, எதிர்பாரா மருத்துவ செலவு போன்றவை) பயன்படுத்தப்படுகிறது. கடன் தொகையாக அதிகபட்சமாக ரூ.25,000/- வரை குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது. இச்சங்கமானது நிதி பயன்பாடு, கடன் திருப்பம் மற்றும் சுழற்சியினை உறுதிப்படுத்துகிறது.