மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் 2.o மூலமாக TN-RISE (Tamil Nadu Rural Incubator and Start-Up Enabler) நிறுவனத்தை தொடங்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
< p>மக்கள் தொகையில் சரிபாதி இருக்கும் பெண்கள் முன்னேற்றம் அடையாமல் எந்தவொரு நாடும் வளர்ச்சி பெற முடியாது. எனவே தான், பெண்களை எல்லா வகையிலும் முன்னேற்றும் அரசாக இந்த திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக, கிராமங்களில் உள்ள பெண்களின் முன்னேற்றம் என்பது மிக முக்கியமானது. கிராமங்களில் இருக்கிற பெண்களும் பெரிய தொழில் முனைவோராக வளர வேண்டும் என்பது நம் முதலமைச்சர் அவர்களின் உயரிய நோக்கமாக உள்ளது. பெண் தொழில் முனைவோர், நிதி, சந்தைகள், தொழில் தொடர்புகள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை எளிதாக பெறுவதற்கு பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இதை உணர்ந்த நம்முடைய முதலமைச்சர் அவர்கள், இந்த தடைகளை போக்கும் வகையில், பிரத்யேக “புத்தொழில் இயக்கம்” ஒன்றை நம் திராவிட மாடல் அரசு உருவாக்கும் எனவும் - அந்த இயக்கம் மகளிர் தொழில் முனைவோருக்கு தேவையான மேம்பட்ட உதவிகளை வழங்கும்” எனவும் சட்டமன்றத்தில் அறிவித்தார்கள்.
பெண்ணுரிமை குறித்து இந்தியாவில் மட்டுமல்ல உலகில் வேறு யாருமே சிந்திக்காத காலகட்டத்தில் சிந்தித்தவர் தந்தை பெரியார்
நான் பல நிகழ்ச்சிகளில் சொன்னதுண்டு. பெண்கள் இரண்டு விதமாக அடிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். ஒன்று, பண்பாட்டு ரீதியாக பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல், பொருளாதார ரீதியாக பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டு பெண்கள் பொருளாதார விடுதலை அடைவதற்கு உலக வங்கி போன்ற நிறுவனங்கள் பேருதவி புரிவதை போல், பண்பாட்டு தளத்தில் பெண்கள் விடுதலை அடைவதற்கு தொடர்ந்து பாடுபட்டு வரும் இயக்கம் திராவிட இயக்கம் – திராவிட முன்னேற்றக் கழகம்.
திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்த போது தான், பேரறிஞர் அண்ணா அவர்கள் சுயமரியாதை திருமணச் சட்டத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை தந்தார்கள். அதே போல, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெண்களுக்கு சொத்துரிமை சட்டம் போன்ற முற்போக்கான சட்டங்களை தந்தார்கள்.
நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துப் பயணத் திட்டம், 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ. 1000 வழங்குகிற கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்ற மகளிர் வளர்ச்சிக்கான திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி உள்ளார்கள்.
விளிம்புநிலையில் இருக்கக் கூடிய மக்களை முன்னேற்றுவதற்காக கழக அரசு பல்வேறு திட்டங்களைப் பார்த்து-பார்த்து நிறைவேற்றி வருகிறது. அந்த வழியிலே தான், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இந்தியாவிலேயே முதன்முதலாக மகளிர் சுயஉதவிக் குழுக்களை தமிழ்நாட்டில் ஏற்படுத்தினார்கள்.
இன்றைக்கு மகளிர் சுய உதவிக் குழுக்கள் தமிழ்நாடு முழுவதும் பல்கிப்பெருகி லட்சக்கணக்கான பெண்களின் வாழ்வில் நம்பிக்கை தருவதாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
மகளிர் சுயஉதவிக் குழுக்களின் வளர்ச்சிக்காக திட்டங்கள் தீட்டி செயல்படுத்தி, அதன் பயனை தமிழ்நாட்டின் கடைக்கோடியில் உள்ள சிறுகிராமத்தில் உள்ள பெண்களிடமும் கொண்டு சேர்க்கும் பணியினை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. மகளிர் மேம்பாட்டுக்கான முக்கிய முயற்சியாக "வாழ்ந்து காட்டுவோம் 2.0" திட்டமானது கிராமப்புறத் தொழில்களை ஊக்குவித்து வருகிறது.
மகளிர் வேலைக்குச் செல்கிறார்கள் என்ற நிலையை, மகளிர் 4 பேருக்கு வேலை கொடுக்கிறார்கள் என்று மாற்றிட அவர்களை தொழில் முனைவோர் ஆக்குவதற்கான திட்டங்களை கழக அரசு செயல்படுத்தி வருகிறது.
இதன் பயனாகத்தான் இன்றைக்கு இந்தியாவில் இருக்கிற மகளிரால் நடத்தப்படும் தொழில் நிறுவனங்களில் 13.5 சதவீதம் தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இருக்கிறது என்பதை பெருமையோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இந்த வெற்றிப் பயணத்தின் மற்றுமொரு மைல்கல்லாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, தமிழ்நாடு ஊரக தொழில் காப்பு மற்றும் புத்தொழில் உருவாக்கு நிறுவனத்தை இப்போது தொடங்கியிருக்கிறது. தொழில் முனைவோராக விரும்பும் பெண்களுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இந்த நிறுவனம் இருக்கும்.
தொழில் செய்வதற்கு ஏற்ற தேவையான நவீன கட்டமைப்பு, உற்பத்தி மேம்பாடு, பேக்கிங், பிராண்டிங், மார்க்கெட்டிங், நிதி மேலாண்மை, நிறுவன உருவாக்கம், நிறுவன செயல்பாடு என மகளிர் தொழில் முனைவோருக்கான உதவிகளை A to Z வழங்குவதற்காக தான் இந்த TN-RISE நிறுவனம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு முழுவதிலும் இருந்து உயர்தர சேவைகளை பெற, ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட 126 மகளிர் தொழில் முனைவோர்களும், 80 மகளிர் தொழிற்குழு நிறுவனங்களும் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நகர்ந்திட இந்த நிறுவனத்தின் மூலம் உரிய ஆலோசனைகள் வழங்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் இதுபோல் நூற்றுக்கணக்கான மகளிர் தொழில் முனைவோர் மற்றும் மகளிர் தொழிற்குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு பயன்பெற இருக்கின்றனர் என்பதை தெரிவித்துக் கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இத்தகைய தொழில் முனைவோருக்கு வழிகாட்டவும், தேவையான உதவிகளை வழங்கவும் உலக அளவில் புகழ்பெற்ற பல்வேறு நிறுவனங்களுடன் இம்மையம் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
மகளிர் தொழில் முனைவோருக்கு தேவையான அனைத்து சேவைகளையும் வழங்கி அவர்களை இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவில் வெற்றிகரமான தொழிலதிபர்களாக உருவாக்கும் முயற்சில் “TN-RISE" நிறுவனம் இன்று முதல் அர்ப்பணிப்புடன் செயல்படும்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக மகளிர் தொழில் முனைவோர்களும், தொழிலதிபர்களும் இருக்கிறார்கள் என்கிற வரலாற்று சாதனையை எட்ட நாம் அனைவரும் சேர்ந்து உழைப்போம்.
எனவே, TN-RISE-ஐ பயன்படுத்தி தமிழ்நாட்டு மகளிர் தங்களுடைய தொழில் முனைவோராகும் கனவை நனவாக்கிக் கொள்ள, அவர்களின் துறையில் வெற்றிப் பெறவும் என் அன்பையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.