ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபாத்தியாய ஊரகத் திறன் பயிற்சித் திட்டம் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம்ஆகியவை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
இந்த அமைப்புகளின் சார்பில் தமிழ்நாட்டின் ஊரக மற்றும் நகர்ப்புரப் பகுதிகளில் சுய உதவிக் குழுக்கள், கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் நகர்ப்புர பகுதி அளவிலான கூட்டமைப்புகள் போன்றவை அமைக்கப்பட்டு, பல்வேறு வறுமை ஒழிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
சுய உதவிக் குழுக்களின் முன்னேற்றத்திற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. அத்திட்டங்களின் செயல்பாடுகள், அவற்றில் அடைந்துள்ள இலக்குகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் போன்றவை குறித்து மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 21.07.2023 அன்று ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், பள்ளி மாணவ மாணவியரின் பசியைப் போக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகள், இளைஞர் திறன் திருவிழாக்கள், சுய உதவிக் குழுக்கள் தயாரிப்புப் பொருட்களை சந்தைப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், மகளிர் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உதவிகள், கிராம மற்றும் நகர்ப்புரங்களில் செயல்படும் சமுதாயம் சார்ந்த அமைப்புகளின் செயல்பாடுகள், அவைகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிதியுதவிகள், பூமாலை வணிக வளாகங்களின் செயல்பாடுகள், திறன் பயிற்சிகள், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் அரசின் நலத் திட்டங்களான மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஆகியவை குறித்து மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆய்வு செய்து, திட்டங்களை திறம்பட செயல்படுத்திட உரிய ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும், சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்ட பல்வேறு அறிவிப்புகளின் நிலை, குறிப்பாக சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 30,000 கோடி வங்கிக் கடன் வழங்க நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் அடைந்துள்ள முன்னேற்றம், இலக்கை விரைந்து எய்திட மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் போன்றவை இந்த ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.