தமிழ்நாடு மகளி மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வழிகாட்டுதலில் செயல்படும் இயற்கைப் பொருட்கள் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர் - சந்தையாளர் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு மகளி மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வழிகாட்டுதலில் செயல்படும் இயற்கைப் பொருட்கள் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர் - சந்தையாளர் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி, 21.11.2023 அன்று சென்னை, கிண்டியில் அமைந்துள்ள ரேடிசன் ப்ளூ ஹோட்டலில் நடைபெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களின் தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கமானது கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களின் பொருளாதார வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. விவசாயத்தில் ஈடுபடும் பெண் விவசாயிகளை ஒருங்கிணைத்து சுய உதவிக் குழுக்களை அமைத்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி வருகிறது. அந்த மகளிர் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்த பயிற்சிகளை வழங்கி, அவர்களை இயற்கை முறையில் விவசாயம் மேற்கொள்ள வைத்து, அவர்கள் விளைவிக்கும் பொருட்களை விற்பானை செய்திட வாய்ப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இயற்கை முறையில் பொருட்களை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் மற்றும் பொருட்களை வாங்கும் சந்தையாளர்கள் இடையேயான நட்புறவை வளர்ப்பதற்கும், உற்பத்தியாளர் - சந்தையாளர் இடையே உள்ள இடைத்தரகர்களைத் தவிர்ப்பதற்கும் இன்றைய தினம் (21.11.2023) இந்த ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியை நடத்துகிறது.

இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக, அங்கு அமைக்கப்பட்டிருந்த இயற்கை பொருட்களின் கண்காட்சி அரங்குகளை ஒன்றிய அரசின் கூடுதல் செயலாளர் திரு. சரண்ஜித் சிங், இ.வ.ப., அவர்கள் திறந்து வைத்தார். தொடர்ந்து, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி. ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் நிகழ்ச்சிக்கு இந்நிகழ்வு குறித்து விளக்க உரையாற்றினார்.

இந்த ஒருங்கிணைப்பு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்திற்கு ஓர் உறுதியான முன் முயற்சியாகும். இதன் மூலம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், இயற்கை விவசாயம் மேற்கொள்பவர்களுக்கு உள்ள சவால்களை நீக்கி, ஊரக அளவில் வேரிலிருந்து ஆதரவை வழங்கிட முன்னோடியான திட்டங்களை தயார் நிலையில் வைத்துள்ளது.

அதில் ஒன்றாக தற்போது இயற்கை பொருட்கள் உற்பத்தியாளர் - சந்தையாளர் ஒருங்கிணைப்பை நடத்தி, இயற்கை பொருட்கள் உற்பத்தியாளர் மற்றும் பொருட்களை வாங்கும் சந்தையாளர்கள் இடையே நட்புறவை ஏற்படுத்தவுள்ளது. இதன் மூலம் இருதரப்பினரும் கலந்தாலோசிக்கவும், விலைகளை நிர்ணயிக்கவும் மற்றும் வளமான வணிகத்தை நடத்துவதற்குமான பலமானப் பாதையை அமைக்கிறது.

இந்த இயற்கை பொருட்கள் உற்பத்தியாளர் - சந்தையாளர் ஒருங்கிணைப்பு, அவற்றின் உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்தவும், பொருட்களை வாங்கவுள்ள சந்தையாளர்களிடம் நேரடி இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளவும் மற்றும் சந்தை வாய்ப்புகளை முழுமையாகப் பெற்றிடவும் வழி வகுக்கும். மேலும் வணிகத்தில் உள்ள இடைத்தரகர்களைத் தவிர்ப்பதன் மூலம் இருதரப்பினருக்கும் இடையேயான விற்பனை பரிமாற்றத் தொகையளவு குறைவதுடன், குறைந்த விலையில் உயர்ந்த தரப் பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்யவும் வழிவகைச் செய்யப்படுகிறது. இதுதவிர, இயற்கை பொருட்கள் உற்பத்தியாளர் - சந்தையாளர் இடையே வெளிப்படையான வணிகமும், நட்புறவும் உறுதிச் செய்யப்படுவதுடன் நீண்டகாலத்திற்கான பிணைப்பையும் ஏற்படுத்துகிறது.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 21 உற்பத்தியாளர் மற்றும் சந்தையாளர்களிடையே 4 கோடியே 67 இலட்சத்து 2 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதன் மூலம் உற்பத்தியாளர்களுக்கு உறுதியான சந்தை இணைப்பை உருவாக்கப்படுவதுடன் வணிக வெற்றிக்கான நீடித்த பிணைப்பு உருவாக்கப்படும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒற்றுமைக்கான உறுதிப்பாட்டை உறுதி செய்வதுடன் இருதரப்பு வளர்ச்சிக்குமான நற்சூழலை உருவாக்கும்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் செயல்படும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் நடைபெறும் இந்த உற்பத்தியாளர்-சந்தையாளர் ஒருங்கிணைப்பு, தமிழ்நாட்டு ஊரகப் பகுதி உழவர்களின் வளர்ச்சிக்கு உயர்வை அடைய வழிவகுக்கும். மேலும் இருதரப்பினருக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்தி வணிக செயல்பாட்டை வளர்ப்பதன் மூலம் தமிழ்நாட்டின் வேளாண் துறையில் உயர்வான ஓர் வெற்றிப் பாதையை உருவாக்கும். அதுமட்டுமின்றி பிற மாநில சந்தையாளர்களின் வழியாக தமிழ்நாட்டின் வேளாண் துறையில் நிலையான மற்றும் உயர்வான வளர்ச்சியை கட்டமைக்கும்.