
தேசிய ஊரகப் பொருளாதார புத்தாக்கத் திட்டம்
தேசிய ஊரகப் பொருளாதார புத்தாக்கத் திட்டத்தின் நோக்கமானது பல்வேறு நிலையிலான வேறுபட்ட செயல்பாடுகளை செயல்படுத்துவதாகும். வட்டார அளவிலான கூட்டமைப்புகளை வலுப்படுத்துதல், மதிப்புக்கூட்டு வளர்ச்சியை மேம்படுத்துதல், தனி நபர் தொழில் மற்றும் தொகுப்புத் தொழிலகங்களை பண்ணை சார்ந்த மற்றும் பண்ணை சாரா பிரிவின் கீழ் அமைத்தல், தொழில் திறன் மேம்பாடு மற்றும் நிதி சேவைகளுக்கான மாற்று திட்டத்தை விரிவுபடுத்துதல் மற்றும் சமூக மேம்பாட்டிற்கான முயற்சிகளை உருவாக்குவதே ஆகும். உலக வங்கியானது இந்த திட்டத்திற்காக ஒன்றிய அரசுக்கு நிதி உதவி வழங்குகிறது. இத்திட்டத்திற்கு ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் முறையே 60:40 என்ற விகிதத்தில் நிதிப்பகிர்வு வழங்குகிறது தேசிய ஊரகப் பொருளாதார புத்தாக்கத் திட்டம் 2019-20 ஆம் ஆண்டிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், ஈரோடு, சேலம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 20 வட்டாரங்களில் செயல்படுத்தப்படுகிறது.
முக்கிய செயல்பாடுகள்
- மாதிரி வட்டார அளவிலான கூட்டமைப்பை உருவாக்கி வலுப்படுத்துவதன் மூலம் இது மற்ற வட்டாரங்களுக்கு ஒரு முன்மாதிரி வட்டாரமாக இயங்கும்.
- சமுதாய மக்களின் திறன் மேம்பாட்டிற்காக சமுதாய மேலாண்மை பயிற்சி மையம் உருவாக்கப்படுகிறது.
- சுய உதவிக் குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு மின்னணு நிதி சேவை பயன்பாடுகளான IMPS, UPI மற்றும் Bank PoS Machine குறித்த பயிற்சி வழங்குதல்.
- • பெண்கள் புதிதாக தொழில் தொடங்குவதற்கும், ஏற்கனவே செய்து வரும் தொழிலை விரிவுபடுத்துவதற்கும் ஏதுவாக ஒரே இடத்தில் அதற்குரிய வசதிகளை பெறுவதற்காக மகளிர் வாழ்வாதார சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மாதிரி வட்டார அளவிலான கூட்டமைப்பு
வட்டார அளவிலான கூட்டமைப்பினை இரண்டாம் நிலை கூட்டமைப்பாக வலுப்படுத்த தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மாதிரி வட்டார அளவிலான கூட்டமைப்பு அணுகுமுறையை பின்பற்றுகிறது. இத்திட்டத்தின் மூலம் வட்டார அளவிலான கூட்டமைப்பினை வலுப்படுத்தி, அவற்றை சுயமாகவும் தன்னிறைவு பெற்ற நிதியமைப்பாகவும் மாற்ற திறன் மேம்பாடு வழங்கப்படும். இம்மாதிரி வட்டார அளவிலான கூட்டமைப்பானது, பிற வட்டார அளவிலான கூட்டமைப்புகளின் திறனை மேம்படுத்துவதற்கு மாதிரி தளமாக அமைகிறது. வட்டார அளவிலான கூட்டமைப்பு, அவர்களின் உறுப்பினர்களின் தேவைகளை புரிந்து கொள்வதற்கும், அவர்களுக்கு தேவையான சேவைகள் மற்றும் தயாரிப்புகளை வடிவமைத்து வழங்குவதற்கும் தொலைநோக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மின்னணு பண பரிவர்த்தனை
மின்னணு பண பரிவர்த்தனை என்பது ஒரு மின்னணு சாதனத்தின் உதவியுடன் தனி நபர்கள் பணம் செலுத்தவும், பணம் பெறவும் வழிவகுக்கிறது. விளிம்பு நிலை மற்றும் விடுபட்ட மக்கள் நிதி சேவைகளை மின்னணு மூலமாக எளிதாக அணுக பயிற்சி வழங்க இத்திட்டம் வழி வகுக்கிறது. சான்றளிக்கப்பட்ட சுய உதவிக்குழு உறுப்பினர்கள் வங்கி வணிக தொடர்பாளராக (BC Sakhi) ஈடுபடுத்தப்பட்டு சுய உதவிக்குழு உறுப்பினர்களிடையே மின்னணு பண பரிவர்த்தனை சேவைகளை வழங்கி வருகின்றனர்.
இரட்டை அங்கீகாரத்திற்கான முன்னோட்டம்
மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் சமூகம் சார்ந்த அமைப்புகளின் வங்கிக் கணக்குகள் (அதாவது ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள்) அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளின் கூட்டு கையொப்பங்களுடன் இயக்கப்படுகின்றன. அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளின் கையொப்பத்தை சரிபார்க்கும் முறை இல்லாததால், மகளிர் சுய உதவிக் குழுக்களால் வங்கி வணிக தொடர்பாளரிடமிருந்து பணம் பெறவோ அல்லது அனுப்பவோ இயலாத நிலை உள்ளது. எனினும், அவர்கள் வங்கி வணிக தொடர்பாளர்கள் வாயிலாக மகளிர் சுய உதவிக்குழுக்களின் வங்கி கணக்குகளில் பணம் செலுத்தலாம். சுய உதவிக் குழுக்களின் வங்கி சேமிப்பு கணக்குகள் வங்கி வணிக தொடர்பாளரிடம் இணைக்கப்பட்டு சோதனை அடிப்படையில் "இரட்டை அங்கீகாரம்" என்ற முறையினை அறிமுகப்படுத்த முன்முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.