நான் தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் கிராமத்தில் இருந்து எனது வாழ்வாதார மேம்பாட்டிற்காக அருகாமையில் செயல்பட்டு வந்த தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை தயாரிக்கும் இடங்களில் கூலி வேலைக்கு சென்று வந்தேன். அத்தகைய வருமானம் எனது குடும்பத்தின் வறுமையை குறைக்க போதுமானதாக இல்லை. தனியார் நுண்நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்கியே காலத்தை கடத்திக் கொண்டிருந்தேன், இத்தகைய சூழ்நிலையில் 2011 ஆம் ஆண்டு புன்னைநல்லூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் உதவியுடன் அமைக்கப்பட்ட செம்பருத்தி மகளிர் சுய உதவிக்குழுவில் ஒரு உறுப்பினராக இணைந்தேன்.
நான் செம்பருத்தி மகளிர் சுயஉதவிக்குழுவில் இணைந்த பின்னர் குழுவின் மூலமாக உள்கடனாக மூன்று முறை தலா ரூ.20,000/- பெற்று அத்தொகையினை கொண்டு தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை தயாரிக்க கூலித் தொழிலாளியாக சென்றபொழுது கற்றுக்கொண்ட அனுபவத்தின் அடிப்படையில் நான் சுயமாக தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை உற்பத்தி செய்யும் தொழில் செய்யத் துவங்கினேன்.
இப்பொம்மைகள் தயாரிக்க தேவையான அடிப்படை மூலபொருட்களான (Raw Materials) சுண்ணாம்பு தூள் (Chalk Powder) மற்றும் காகித தூள் (Paper Powder) ஆகியவற்றை கடலூர் மாவட்டத்திலிருந்து கொள்முதல் செய்து தலையாட்டி பொம்மைகளை நான் தயாரித்து வருகிறேன்.
என்னுடைய தொழிலில் எனது கணவரும், குடும்ப உறுப்பினர்களும் உறுதுணையாக இருந்ததால் அதிகளவில் பொம்மைகள் தயாரிக்க முடிந்தது. நாளொன்றிற்கு ஒரு நபருக்கு 15 பொம்மைகள் வீதம் குழு உறுப்பினாக்ளை கொண்டு 60 பொம்மைகள் தயாரித்து வருகின்றேன் டான்சிங் டால், தலையாட்டிப் பொம்மை, செட்டியார், பொம்மைகள் போன்ற வகைகள் மிகவும் பிரசித்திப் பெற்றவை.
தலையாட்டி பொம்மை ரூ.40/-க்கும், டான்சிங் டால் ஜோடி ஒன்று ரூ.150/-க்கும் தஞ்சை மாவட்டத்திலுள்ள மதி விற்பனை அங்காடிகளிலும் (தஞ்சை தாரகைகள்) மற்றும் தஞ்சை இரயில் நிலையத்தில் புதிதாக துவக்கப்பட்டுள்ள ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு (One Station, One Product) நிலையத்திலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையத்தில் விற்பனை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு நாளைக்கு ரூ.1000/- முதலீடு செய்து ரூ.900/- வரை இலாபம் ஈட்டி வருகிறேன். இதன் மூலம் ஒரு வருடத்திற்கு ரூ.1.50 இலட்சம் வருமானம் வருகிறது.
ஒரு வாரத்திற்கு சராசரியாக தஞ்சை தாரகை விற்பனை அங்காடிகளில் 1,00,000/- தலையாட்டி பொம்மைகளும் மற்றும் தஞ்சை இரயில் நிலையத்தில் செயல்பட்டு வரும் விற்பனை நிலையத்தில் 25,000/- பொம்மைகளும் விற்பனை ஆகின்றது. வருடத்திற்கு ரூ.1.50 இலட்சம் எனக்கு வருமானம் வருகிறது. என்னுடைய வாழ்வாதாரம் உயர்வதற்கு காரணமாக இருந்த தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்திற்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.