தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 15.09.2022 அன்று மதுரை அரசுப் பள்ளியில் (CMBFS) வரலாற்றுச் சிறப்புமிக்க காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
“நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால், பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்கு கிடைத்திருக்கிறது. பள்ளிகள் மிகத் தூரமாக இருப்பது மட்டுமல்ல, சிலருடைய குடும்ப சூழலும் இதற்குக் காரணமாக இருக்கிறது. இதனை மனதில் கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை நாம் தீட்டி இருக்கிறோம். முதற்கட்டமாக சில மாநகராட்சி, நகராட்சிகளிலும், தொலைதூரக் கிராமங்களிலும் இத்திட்டம் தொடங்கப்படும். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும்” என்று ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 7.5.2022 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விதி 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டார்.
ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்ட போதிலும், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கான கோப்பில் கையெழுத்திட்டபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்றும், பள்ளிக்கல்வியை மேலும் பரவலாக்குவது, கற்றலை இனிமையாக்குவது என்ற நோக்கத்தில் “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதிலும், ஏழைக் குழந்தைகளின் வாழ்க்கையில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதிலும் சந்தேகம் இல்லை என்று முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கான அரசாணையினை வெளியிட்ட நாளன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
நாட்டிலேயே முன்னோடி திட்டமான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவினை பரிமாறி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்து, மாணவர்களுடன் உணவருந்தினார்.
தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், இத்திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 417 மாநகராட்சி பள்ளிகளில் 43,681 மாணவர்கள், 163 நகராட்சி பள்ளிகளில் 17,427 மாணவர்கள், 728 வட்டாரம் மற்றும் கிராம ஊராட்சி பள்ளிகளில் 42,826 மாணவர்கள், 237 தொலைதூர, மலைபிரதேச பள்ளிகளில் 10,161 மாணவர்கள், என மொத்தம் 1,545 பள்ளிகளில் தொடங்கப்பட்டு, 1,14,095 மாணவர்கள் பயன்பெறுவார்கள்.
மாணவ, மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமலிருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகர்ப்புற நிர்வாகம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், பள்ளிக்கல்வித் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை ஆகிய துறைகளின் அலுவலர்களை கொண்ட மாநில, மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, இத்திட்டம் கண்காணிக்கப்படும்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத் தொடக்க விழாவில், கோயம்புத்தூர், வடிவேலம்பாளையத்தில் கடந்த 30 ஆண்டு காலமாக ஏழை எளியவர்களுக்கு ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்கும் சமூக சேவகி திருமதி கமலாத்தாள் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சிறப்பு செய்தார்கள்.