தமிழ்நாட்டில் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு மற்றும் நிதி உள்ளாக்கம் ஆகியவற்றை வழங்கிட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி ஆகியவற்றிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

மகளிர் முன்னேற்றத்திற்காக செயல்பட்டு வரும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் துணை அமைப்பான தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (TNSRLM) வழிகாட்டுதலில் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அக்குழுக்களின் பொருளாதார சுயசார்பிற்கு வலு சேர்க்கும் வகையில் வங்கிக் கடன் இணைப்புகள் உள்ளிட்ட ஏராளமான கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் 2023-2024ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 30,000 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை செயல்படுத்தி, சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் இலக்கை எய்திடவும், சுய உதவிக் குழுக்களுக்கு விரைவாக வங்கிக் கடன் இணைப்புகள் பெற்றுத் தந்திடவும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, 20.06.2023 அன்று சென்னை, நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாக கூட்ட அரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி ஆகியவற்றிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி. ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்களும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொது மேலாளர் திரு. எம். மோகன் அவர்களும், கனரா வங்கியின் முதன்மைப் பொது மேலாளர் திரு. நாயர் அஜித் கிருஷ்ணன் அவர்களும் கையெழுத்திட்டனர். இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் திருமதி. பா. பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., அவர்கள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் துணைப்பொது மேலாளர் திருமதி. துர்க்கா தேவி அவர்கள், உதவிப் பொது மேலாளர் திரு. தீபக் குமார் திரிபாதி அவர்கள், மேலாளர் சுமதி அவர்கள், கனரா வங்கியின் பிராந்திய மேலாளர் திரு. ஜி. விஜயராகவன் அவர்கள், மேலாளர் திரு. ஆர். உதயக்குமார் அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.