தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள் கிருஸ்துமஸ் - புத்தாண்டு – பொங்கல் விற்பனைக் கண்காட்சி சென்னை, நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் 23.12.2023 முதல் 07.01.2024 வரை நடைபெறுகிறது.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் கிருஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் விற்பனைக் கண்காட்சியினை இன்று (23.12.2023) சென்னை, நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் முதன்மை செயலாக்க அலுவலர் திருமதி. ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்து, கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளில், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களைப் பார்வையிட்டார்.

இக்கண்காட்சியில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களான முந்திரிப் பருப்பு வகைகள், மசாலாப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், நாட்டுச் சர்க்கரை, சத்து மாவு, சுடுமண் சிற்பங்கள், கால் மிதியடிகள், பட்டு மற்றும் பருத்திப் புடவைகள், கைவினைப் பொருட்கள், பனை ஓலைப் பொருட்கள், மிளகு, இயற்கை மூலிகைகள், செயற்கை ஆபரணங்கள், சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகள், பரிசுப் பொருட்கள், ஆயத்த ஆடைகள், மரச் சிற்பங்கள், இயற்கை உரங்கள், தேன், கடலை மிட்டாய், மூலிகை பொடிகள் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஆகியவற்றின் வழிகாட்டுதலில் செயல்படும் சுய உதவிக் குழுக்கள், திருநங்கையர் சுய உதவிக் குழுக்களும் தங்களின் தயாரிப்புப் பொருட்களை விற்பனை செய்ய உள்ளனர். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத துணிப் பைகள், மஞ்சப் பைகள் விற்பனை செய்யும் அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய சுவை மிகுந்த உணவுகளை உண்டு களித்திட உணவு அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது.

2023 டிசம்பர் 23ஆம் தேதி முதல் 2024 ஜனவரி 07ஆம் தேதி வரை நாள்தோறும் காலை 10.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.

இச்சிறப்புமிகு மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களின் கிருஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் விற்பனைக் கண்காட்சிக்கு பொதுமக்கள் அனைவரும் வருகை தந்து, மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரித்த தரமான பொருட்களை வாங்கி பயனடைவதோடு, மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவிட வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.